சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் புதிதாக அமைக்கப்படும் மழைநீர் வடிகால்களை முறையாக இணைக்காததால், நேற்று பல இடங்களில் மழைநீர் தேங்கியதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் 2 ஆயிரத்து 624 கிமீ நீள மழைநீர் வடிகால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவற்றை ஓட்டேரி நல்லா, கொடுங்கையூர் கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய் மற்றும் கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் போன்றவற்றுடன் இணைக்க வேண்டும். மழை காலங்களில் மாநகரில் பெய்யும் மழைநீரை வடிய செய்வதில் இந்த மழைநீர் வடிகால்களும், கால்வாய்களும் முக்கிய பங்காற்றுகின்றன.
இந்நிலையில் ‘ஃபெஞ்சல்’ புயல் காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்யத் தொடங்கியது. நேற்று காலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டுமே நுங்கம்பாக்கத்தில் 4.5 செமீ மழை பதிவாகியுள்ளது. நேற்று காலை 8.30 முதல் பிற்பகல் 2.30 மணி வரை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் ஆகிய இடங்களில் தலா 10 செமீ மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
குறிப்பாக வளசரவாக்கம் திருவள்ளுவர் சாலை, பெருங்குடி மண்டலம் புழுதிவாக்கம், அண்ணாநகர் மண்டலம் டிஎம்பி நகர் 16-வது தெரு, மணலி மண்டலம் அப்துல் கலாம் நகர், புளியந்தோப்பு நெடுஞ்சாலை, பட்டாளம், வியாசர்பாடி முல்லை நகர், புரசைவாக்கம் டானா தெரு, கோடம்பாக்கம் ரயில்வே பார்டர் சாலை, துரைப்பாக்கம் எம்சிஎன் நகர், கொடுங்கையூர் முத்தமிழ் நகர், பெரம்பூர் நெடுஞ்சாலை, பழைய வண்ணாரப்பேட்டை பரசுராமன் தெரு, கண்ணன் தெரு, வேளச்சேரி தாண்டீஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கியது. அப்பகுதியில் மாநகராட்சி சார்பில் ராட்சத நீர் இறைக்கும் இயந்திரங்கள், டிராக்டரில் பொருத்தப்பட்ட நீர் இறைக்கும் இயந்திரங்கள் மூலம் மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஒரு சில இடங்களில் மழைநீர் தேங்குவதற்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவது காரணமாக கூறப்படுகிறது. அதேநேரம், பல இடங்களில் மாநகராட்சி சார்பில் ஆங்காங்கே மழைநீர் வடிகால்களை தனித்தனியே கட்டிவிட்டு, அவற்றை முறையாக இணைத்து, கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய்களுடன் இணைக்காததால் மழைநீர் இயல்பாக வழிந்தோட முடியாமல் தேக்கம் ஏற்பட்டு அவதிக்குள்ளாவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
பல இடங்களில் மாநகராட்சி நிர்வாகம் வேறு வழியின்றி மழைநீர் வடிகாலில் தேங்கிய மழைநீரை, நீர் இறைக்கும் இயந்திரங்கள் மூலம் எடுத்து வேறு ஒரு சாலையில் விட்டு வடிக்கும் நிலை இருந்து வருகிறது. மழைநீர் வடிகால்களுக்கு இடையே இணைப்பு ஏற்படுத்தினால் மட்டுமே மழைநீர் தேங்கும் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என்பதால் வருங்காலங்களில் அதை மாநகராட்சி தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.