சென்னை: ‘பெருமழை அச்சத்தில் இருந்து சென்னை மக்களைப் பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும்’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த சில ஆண்டுகளாகவே நவம்பர், டிசம்பர் மாதம் வந்தாலே சென்னை மாநகர வாசிகள் ஒவ்வொரு நாளையும் அச்சத்துடன் கடக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. கோடையில் தண்ணீர் பற்றாக்குறையும், மழைக்காலத்தில் வெள்ளமும் சென்னையில் வழக்கமாகிவிட்டது.
இந்நிலையில், இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெள்ளப் பாதிப்பு ஏற்படாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக டிசம்பர் 11, 12 நாட்களில் அதிக கனமழை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் அதிக பாதிப்புகள் இருக்கக்கூடும்.
எனவே, பெருமழை அச்சத்தில் இருந்து சென்னை மக்களைப் பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும். சென்னையின் மழை வெள்ள பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் அரசுக்கு மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.