சென்னை நகரில் வியாழக்கிழமை இரவு மின்தடை ஏற்பட்டது குறித்து தமிழக மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
மணலி மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால், மின் விநியோகம் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
சென்னையில் மின்தடை
வட சென்னை, தென் சென்னை மற்றும் மத்திய சென்னைக்கு உள்பட்ட பல்வேறு முக்கிய இடங்களில் வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் திடீர் மின்தடை ஏற்பட்டது.
மேலும், முக்கிய சாலைகளிலும் தெரு விளக்குகள் அணைந்ததால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணிவரை நீட்டித்த மின்தடையானது, அதன்பிறகு படிப்படியாக சீரமைக்கப்பட்டு மின் விநியோகம் மீண்டும் வழங்கப்பட்டது.
மின்வாரியம் விளக்கம்
இந்த நிலையில், சென்னையில் மின்தடை ஏற்பட்டது குறித்து மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
“சென்னை மணலி மின் நிலையத்தில் வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இரட்டை மின் ஆதாரங்களும் பழுதானது. இதனால், சென்னை நகரில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.
உடனடியாக, மின் வாரிய ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு புலியந்தோப்பு மின் நிலையம் மூலம் மாற்று பாதையில் மின் விநியோகம் அளித்த பிறகு நகர் முழுவதும் படிப்படியாக மின் விநியோகம் சீரானது.
மேலும், மணலி மின் நிலையத்தில் ஏற்பட்ட பழுதும் இரவோடு இரவாக சரிசெய்யப்பட்டு, காலை 6 மணிமுதல் வழக்கம்போல் மின் விநியோகம் செயல்படத் தொடங்கியுள்ளது” எனத் தெரிவித்துள்ளனர்.