சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் ரூ.23 கோடியில் சீரமைக்கப்பட்ட பாரம்பரிய நீதிமன்ற கட்டிடத்தை உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் திறந்து வைத்தார்.
சென்னை உயர் நீதிமன்றம் அருகில் உள்ள அரசு அம்பேத்கர் சட்டக்கல்லூரி இயங்கிய பாரம்பரிய கட்டிடத்தை, தமிழக அரசு சீரமைத்துள்ளது. இதில், சென்னை உயர் நீதிமன்ற வழக்குகளை விசாரிக்க ஏதுவாக மாற்றப்பட்டு, நீதிமன்ற அறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த கட்டிடம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், மத்திய சட்டத் துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் முன்னிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் கட்டிடத்தை திறந்து வைத்தார்.
பின்னர், அவர் பேசியதாவது: இந்தியாவின் பட்டய நீதிமன்றங்களில் சென்னை உயர் நீதிமன்றம் ஒரு உச்சபட்சமான அமைப்பாக நிற்கிறது. 1862-ல் தொடங்கப்பட்ட நாள் முதல்,நாம் அனைவரும் நீதிக்காக ஒன்றிணைந்து செயல்படுவதற்கான ஒரு குறியீடாகவும் இருந்து வருகிறது. இந்தப் புதுப்பிக்கப்பட்ட கட்டிடம், பழைய மற்றும் புதியவற்றின் ஒருங்கிணைப்புக்கும், மாற்றத்துக்கும் ஒரு குறியீடாக அமையும். இவ்வாறு அவர் பேசினார்.
மத்திய சட்டத்துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் பேசும்போது, “இந்தகூடுதல் பாரம்பரிய நீதிமன்றக் கட்டிடத்தை நாம் திறந்து வைக்கும்போது, நீதி தாமதப்படுத்தப்படாது, மறுக்கப்படாது, அது ஒவ்வொரு குடிமகனுக்கும் சென்றடையும் என்பதை உறுதி செய்வதற்கான நமது நோக்கத்தை இது மீண்டும் உறுதிப்படுத்தட்டும்” என்றார்.
உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசும் போது, “இதுஒரு வரலாற்று நிகழ்வு. இந்தகட்டிடத்தில் இயங்கும் நீதிமன்றங்களில் இருந்து தரமான தீர்ப்புகள் வரட்டும்” என்றார். உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் பேசும்போது, “சட்டக்கல்லூரியாக தோன்றி, உயர் நீதிமன்றத்தின் அங்கமாக மாறியிருக்கும் இந்த கட்டிடம், தலைசிறந்த வாதங்களையும், நீதிமன்ற தீர்ப்புகளையும் வழங்கட்டும்” என்றார்.
இதேபோல் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா பேசும்போது,”இந்தியாவின் மிக பழமையான நீதிமன்றம் இதில் இயங்க உள்ளது. அவற்றிலிருந்து வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்புகள் வரும்” என்றார்.தமிழக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பேசும்போது, “அனைத்து வழக்காடிகளுக்கும், விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக நீதித்துறைக்கு தேவையான அடிப்படை மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகளை வழங்க அரசு முன்னுரிமை அளித்து வருகிறது” என்றார்.
இந்நிகழ்ச்சியில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எம்.எஸ்.ரமேஷ், மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், தமிழக அரசு தலைமைவழக்கறிஞர் பி.எஸ்.ராமன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.