சென்னையில் விளம்பரப் பலகைகளுக்கு உரிமம் வழங்க மாநகராட்சி திட்டம் | Corporation planned to license for Advertisements Boards in Chennai

1273826.jpg
Spread the love

சென்னை: சென்னை மாநகரப் பகுதிகளில் விளம்பரப் பலகைகளை நிறுவுவதற்கு உரிமம் வழங்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

சென்னை மாநகரப் பகுதியில் விளம்பரப் பலகைகளை நிறுவ மாநகராட்சியிடம் உரிமம் பெற வேண்டும். உரிமம் பெறாமல் விளம்பரப் பலகைகளை நிறுவுவது விதிமீறலாகும். கோடை காலத்தில் தமிழகம் உள்பட நாடு முழுவதும் கடும் வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில், மும்பையில் 120 அடி உயர ராட்சத விளம்பரப் பலகை பெட்ரோல் பங்க் மீது விழுந்தது. இதில் சிக்கிக்கொண்ட 16 பேர் உயிரிழந்தனர். 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மாநகராட்சி நிர்வாகம் நடத்திய விசாரணையில் அந்த விளம்பரப் பலகை, மாநகராட்சி அனுமதி இன்றி வைக்கப்பட்டது தெரியவந்தது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி நிர்வாகம் மாநகரப் பகுதியில் அனுமதி இன்றி வைக்கப்பட்ட விளம்பரப் பலகைகளை அகற்ற நடவடிக்கை எடுத்தது. இதுவரை 460-க்கும் மேற்பட்ட விளம்பரப் பலகைகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியுள்ளது. அதில் 30 அடி உயரத்துக்கு மேல் வைக்கப்பட்டிருந்த 250 விளம்பரப் பலகைகள் அஸ்திவாரத்தோடு அகற்றப்பட்டுள்ளன. இதனிடையே, மாநகராட்சியின் விளம்பரப் பலகைகளுக்கு அனுமதி வழங்கும் குழு சில தினங்களுக்கு முன்பு கூடியது. இதில், விளம்பரப் பலகைகள் வைக்க அனுமதி வேண்டி வழங்கப்பட்ட 1,100 விண்ணப்பங்களை பரிசீலிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாநகராட்சி மண்டல அலுவலர்களுக்கு அனுப்பி, விளம்பரப் பலகை வைக்க உள்ள கட்டிடத்தின் உறுதித் தன்மையை ஆராய உத்தரவிடப்பட்டுள்ளது. காவல்துறையின் தடையின்மை சான்றும் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்விரு சான்றுகள் கிடைத்த பிறகு, விளம்பரப் பலகைகளுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.30 கோடி வருவாய் கிடைக்கும். தற்போது வரை எந்த விளம்பரப் பலகைகளுக்கும் மாநகராட்சி உரிமம் வழங்கவில்லை. அவ்வாறு ஏதேனும் நிறுவப்பட்டிருந்தால், அது விதிகளை மீறி வைக்கப்பட்ட விளம்பரப் பலகையாக கருதப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *