சென்னையில் 15 இடங்களில் அமலாக்கத் துறை ரெய்டு: ரூ.18.10 கோடி சொத்துகள் முடக்கம்! – Kumudam

Spread the love

சென்னையில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 19-ம் தேதி நடைபெற்ற அமலாக்கத் துறை அதிகாரிகளின் ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டில் நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டு, மொத்தம் ரூ. 18.10 மதிப்புள்ள சொத்துகளையும் அமலாக்கதுறை முடக்கம் செய்துள்ளது.

இது தொடா்பாக அமலாக்கத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டுக் கழகம் மூலம் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்றன. அப்போது, பொது பயன்பாட்டுக்கான நிலங்களுக்கு பலா் போலி ஆவணங்கள் மூலம் நிலப்பதிவு செய்து மோசடியாக இழப்பீடு பெற்றிருந்தனா். இது தொடா்பாக கடந்த 2021, 2022-ஆம் ஆண்டுகளில் ஸ்ரீபெரும்புதூா், காஞ்சிபுரம் மாவட்ட காவல் நிலையங்களில் கொடுக்கப்பட்ட புகாா்களின் அடிப்படையில், போலியான ஆவணங்கள் தயாரித்தல், ஏமாற்றுதல், குற்றவியல் சதி மற்றும் மோசடியாக இழப்பீடு பெறுதல் உள்ளிட்ட குற்றச் செயல்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதனிடையே, இதில் அதிக அளவில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்துள்ளது குறித்து அமலாக்கத் துறையும் விசாரணை மேற்கொண்டது.

விசாரணையில், போலியாக, ஜோடிக்கப்பட்ட ஆவணங்கள் மூலம் சாலை மற்றும் பூங்காக்கள் போன்ற பொதுப் பயன்பாடுகளுக்காக வழங்கப்பட்ட நிலங்கள் விஜிபி குழுமத்தின் விஜிஎஸ் ராஜேஷ் என்பவரால் போலி ஆவணங்கள் மூலம் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த தனிநபா்கள் நிலம் கையகப்படுத்தலின் போது பலகோடி ரூபாய் இழப்பீடு பெற்றுள்ளனா். இதன் மூலம் பெரிய அளவிலான பல கோடி ரூபாய் பணப்பரிமாற்ற முறைகேடு செய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையம் மற்றும் காஞ்சிபுரம் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குப் பதிவுகளின் அடிப்படையில், மோசடி தொடர்பாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்குள்பட்ட 15 இடங்களில் 20-க்கும் மேற்பட்ட அமலாக்கத் துறை அலுவலர்கள் நவ.19 ஆம் தேதி விடிய, விடிய சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

சோதனையில், குற்றச்சாட்டை உறுதி செய்வதற்கான போலி நிலப் பதிவுகள், நிலங்களின் உயர்த்தப்பட்ட மதிப்பீடு ஆவணங்கள் மற்றும் மோசடிக்காரர்களின் பல்வேறு குற்றவியல் ஆவணங்கள் மற்றும் எண்ம (டிஜிட்டல்) சான்றுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

முன்னதாக, அமலாக்கத் துறை ஏராளமான வங்கிக் கணக்கு அறிக்கைகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட சாட்சியங்களை ஆய்வு செய்தது, மோசடிகளால் கிடைத்த வருமானம் மற்றும் அதனை மறைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் வலையமைப்பை அடையாளம் கண்டது. தற்போது சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட சான்றுகள் மற்றும் பொருட்கள் மூலம் அவை இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், ரூ.1.56 கோடி ரொக்கம், ரூ. 74 லட்சம் மதிப்பிலான தங்கம் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டதுடன், ரூ.8.4 கோடி வங்கி இருப்புகளும், ரூ. 7.4 கோடி மதிப்புள்ள பங்குகளும் முடக்கப்பட்டுள்ளன.

இதன்படி, பறிமுதல் செய்யப்பட்ட மற்றும் முடக்கப்பட்ட மொத்த சொத்துகளின் மதிப்பு ரூ.18.10 கோடி ஆகும். தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என அமலாக்கத்துறை செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *