சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் இரட்டை அடுக்கு மேம்பாலப் பணிகள் தீவிரம் | Double decker flyover work in Phase II of Metro Rail project is in full swing

1289781.jpg
Spread the love

சென்னை: சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், 5-வது மற்றும் 4-வது வழித்தட மெட்ரோ ரயில் பாதைகளை 3.75 கி.மீ. தொலைவுக்கு இணைக்கும் விதமாக, ஆழ்வார்திருநகர் – ஆலப்பாக்கம் இடையே 24 மீட்டர் உயரத்தில் இரட்டை அடுக்கு மேம்பாலப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், மொத்தம் 3 வழித்தடங்களில் 116.1 கி.மீ. தொலைவில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில், மாதவரம் – சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடம், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடம் இடையேயான மெட்ரோ ரயில் பாதை சில இடங்களில் இணைகின்றன. குறிப்பாக, போரூர் சந்திப்பு, ஆலப்பாக்கம், காரம்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்கள் பகுதிகளில் இரட்டை அடுக்கு மேம்பாலப் பாதைகள் அமையவுள்ளன.

மொத்தம் 3.75 கி.மீ. தொலைவுக்கு 24 மீட்டர் உயரத்தில் இரட்டை அடுக்கு மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இதற்காக, பிரத்யேக லாஞ்சிங் கிர்டர் வகையைச் சேர்ந்த ராட்சத இயந்திரங்கள் ஃபீடிங் கான்டிரிஸ் (தூக்குகூட இயந்திரங்கள்) ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. இந்த பாதையில் சி-4, சி-5 என்று பிரித்து பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 160-க்கும் மேற்பட்ட தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. வளசரவாக்கம் அருகே மேம்பாலத்தின் மீது தண்டவாளம் அமைக்கும் பணியும் முழுவீச்சில் நடைபெறுகிறது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியது: “கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடத்தில், போரூர் – பவுர் ஹவுஸ் பாதையில் ஒருபகுதியாக இரட்டை அடுக்கு பாதை அமைக்கப்படுகிறது. இப்பாதை வரும் 2026-ம் ஆண்டு ஜூனில் தயாராகிவிடும். இதற்காக பயன்படுத்தும் பிரத்யேக லாஞ்சிங் கர்டர் இயந்திரங்கள், கான்டிரி இயந்திரத்தின் மதிப்பு ரூ.15 கோடி ஆகும். தூண்களின் ஒற்றை வரிசையில் இரட்டைஅடுக்கு பாதை உருவாக்க இந்த இயந்திரங்களை பயன்படுத்துவது சவாலானது. தூண்கள் அமைக்கப்பட்ட இடங்களில் “யு” கர்டர், “ஐ” கர்டர் தூக்கி வைக்கும் பணியும் நடைபெறுகிறது. சுமார் 2 ஆண்டுகளில் இரட்டை அடுக்கு மேம்பால பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளது.” என்று கூறினர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *