சென்னை ஃபார்முலா-4 கார் பந்தயத்துக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் பாஜக அவசர வழக்கு | Case on behalf of BJP seeking ban on Formula 4 car race in Chennai: Hearing tomorrow

1301689.jpg
Spread the love

சென்னை: சென்னையில் நடைபெறவுள்ள ஃபார்முலா-4 கார் பந்தயத்துக்கு தடை விதிக்கக் கோரி பாஜக சார்பில் அதன் செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தொடர்ந்துள்ள வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

சென்னையில் ஃபார்முலா – 4 ஸ்ட்ரீட் கார் பந்தயம் வரும் ஆக.31 மற்றும் செப்.1 ஆகிய தேதிகளில் தீவுத்திடலை சுற்றிலும் உள்ள வட்ட வடிவ சாலை மார்க்கமாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மேற்பார்வையில் தனியார் நிறுவனம் சார்பில் நடத்தப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதற்காக சாலையின் இருபுறங்களிலும் கார் பந்தயதுக்கு ஏற்றவாறு இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு, மன்றோ சிலை சாலையில் பார்வையாளர்கள் மேடையில் அமர்ந்து இந்த பந்தயத்தை கண்டுகளிக்கும் விதமாக மேடையும் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்தக் கார் பந்தயத்தை பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எவ்வித இடையூறும் இல்லாமல் அமைதியான முறையில் நடத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த கார் பந்தயதுக்கு தடை விதிக்கக்கோரி தமிழக பாஜக செய்தி தொடர்பாளரான ஏ.என்.எஸ். பிரசாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், ‘இதுபோன்ற கார் பந்தயங்களை உலகளவில் அதற்கான சர்வதேச கூட்டமைப்பு தான் நடத்தும். அதுவும் அதிவேக கார் பந்தயங்கள் பொதுமக்களின் புழக்கத்தில் உள்ள பொது சாலைகளில் நடத்தப்படாது. கார் பந்தயங்களின் போது நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் அந்த கூட்டமைப்பே பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில் இந்த கார் பந்தயத்தில் பற்கேற்கும் வீரர்கள், சாலைகள், அதற்கான தகுதிகளையும் பந்தயத்துக்கான விதிமுறைகளையும், அதற்கான சிறப்பு உரிமங்களையும் இந்த கூட்டமைப்பு தான் நிர்ணயம் செய்துள்ளது.

ஆனால், சென்னையில் நடைபெறவுள்ள இந்த ஃபார்முலா -4 ஸ்ட்ரீட் கார் பந்தயத்தை தனியார் நிறுவனம் நடத்தவுள்ளது. ஏற்கெனவே புயல் காரணமாக தள்ளி வைக்கப்பட்ட இந்த கார் பந்தயம் வரும் ஆக.31 மற்றும் செப்.1 ஆகிய தேதிகளில் நடத்தப்படவுள்ளது. தற்போது சென்னையில் பொது போக்குவரத்து மற்றும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக இந்த பந்தயம் 3.7 கிமீ தூரத்துக்கு தீவுத்திடலை சுற்றிலும் உள்ள பகுதிகளில் நடத்தப்படவுள்ளது.

இதனால் அண்ணா சாலை, நேப்பியர் பாலம் மற்றும் சிவானந்தா சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்படும். பொதுமக்கள் பயன்பாட்டுக்காக உள்ள சாலையில் இந்த கார் பந்தயத்தை நடத்துவது என்பது மோட்டார் வாகன விதிகளுக்கும் முரணானது. அனைத்து வசதிகளும் நிறைந்த இருங்காட்டுக்கோட்டையில் இந்த கார் பந்தயத்தை நடத்தினால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. எனவே, சென்னையில் இந்த கார் பந்தயத்தை நடத்தக்கூடாது என தடை விதிக்க வேண்டும்’ என கோரியிருந்தார்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சன்னி ஷீன், பொறுப்பு தலைமை நீதிபதிகள் டி. கிருஷ்ணகுமார் மற்றும் பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் செவ்வாய்க்கிழமை முறையீடு செய்தார். இதையடுத்து நீதிபதிகள், மனு தாக்கல் செய்யும் நடைமுறைகள் முடிந்தால், இந்த வழக்கை நாளை (ஆக.28) விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *