சென்னை: உள்ளாடைக்குள் ஸ்பெஷல் பாக்கெட்; சூப்பர் மார்க்கெட்களில் கைவரிசை காட்டும் பெண்கள் சிக்கினர்

Spread the love

சென்னை, அண்ணா நகர் 6-வது அவென்யூவில் உள்ள பிரபலமான சூப்பர் மார்க்கெட்டின் மேலாளர் அனில் என்பவர் அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், “19.01.2026-ம் தேதி வாடிக்கையாளர்கள் போல கடைக்கு வந்த இரண்டு பெண்கள் தாங்கள் அணிந்திருந்த உள்ளாடைக்குள் மளிகை பொருட்களை மறைத்து வைத்து திருடிச் சென்றுவிட்டனர், அவர்களுக்கு உதவ இரண்டு ஆண்களும் வந்திருந்தனர். எனவே மளிகை பொருள்களைத் திருடிய 4 பேர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு ஆதாரமாக சி.சி.டி.வி.கேமரா பதிவுகளையும் போலீஸாரிடம் ஒப்படைத்தார். சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது பெண்கள், பொருள்களை எடுத்து தாங்கள் அணிந்திருந்த உள்ளாடைக்குள் மறைத்து எடுத்துச் செல்லும் காட்சிகள் தெளிவாக பதிவாகியிருந்தது.

உடனே அவர்கள் யாரென்று போலீஸார் விசாரித்து வந்தனர். இந்தப் புகாரைத் தொடர்ந்து அண்ணா நகர் 3-வது அவென்யூவில் உள்ள மற்றொரு சூப்பர் மார்க்கெட்டின் மேலாளர் கிருஷ்ணகுமார் என்பவரும் கடைக்கு வந்த இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள் பொருட்களை திருடி சென்றுவிட்டதாக புகாரளித்தார். இந்த இரண்டு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது ஒரே கும்பல் என்பதை போலீஸார் முதலில் கண்டறிந்தனர்.

நாகு

இந்தச் சூழலில்தான் அண்ணா நகர் 6வது அவென்யூவில் உள்ள பழமுதிர் நிலையத்தில் பணியாற்றும் துணை மேலாளர் ஆகாஷ் என்பவரை காரில் வந்த ஒரு கும்பல் கத்தியை காட்டி மிரட்டி 2,500 ரூபாயை வழிபறி செய்தது. அதுதொடர்பாக ஆகாஷ், அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

சூப்பர் மார்க்கெட், பழமுதிர் நிலையத்தில் நடந்த இந்த திருட்டு, வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட காரின் பதிவு நம்பரை வைத்து போலீஸார் விசாரணையை தொடங்கினர். விசாரணையில் இந்த மூன்று சம்பவங்களிலும் ஈடுபட்டது தேனிமாவட்டம், கம்பம் பகுதியைச் சேர்ந்த வட்சுமி (எ) தனலட்சுமி (50), நாகம்மாள் (எ) நாகு, (70) ஆகியோர் எனத் தெரியவந்தது.

உடனே அவர்களை போலீஸார் கைது செய்து விசாரித்தபோது மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த முருகன், (58), வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முதார்சீர் (40), மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கரண்குமார்(25) ஆகியோருக்கும் இந்த வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர்களையும் போலீஸார் கைது செய்தனர். கைதானவர்களிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து அண்ணாநகர் போலீஸார் கூறுகையில், “இந்த வழக்கில் கைதான 5 பேரும் 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகம் முழுவதும் இதே ஸ்டைலில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. இதற்காக பெண்கள், பெரிய சைஸ் பாக்கெட்டுகளுடன் கூடிய பாவாடைகளை ஸ்பெஷலாக தைத்து அதை திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் போது அணிந்துக் கொள்வார்கள்.

பிரபலமான சூப்பர் மார்க்கெட்களுக்குள் காரில் வந்திறங்கும் இந்தக் கும்பல் பொருள்களை வாங்குவது போல அனைத்து பொருட்களையும் எடுப்பார்கள். அப்போது கடை ஊழியர்கள் இல்லாத சமயங்களில் பாவடைக்குள் இருக்கும் பாக்கெட்க்குள் மளிகை பொருள்களை திருடி வைத்துக் கொள்வார்கள். அதன்பிறகு எந்தவித பொருள்களும் வாங்காமல் அங்கிருந்து ஒவ்வொருவராக வெளியேறி விடுவார்கள்.

உள்ளாடைக்குள் மறைத்து திருடிய லட்சுமி

கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்களின் சொந்த ஊர்களிலிருந்து இவர்கள் அனைவரும் சென்னைக்கு வந்து வடபழனியில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருக்கிறார்கள். வடபழனி, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சூப்பர் மார்க்கெட்களில் தங்களின் ஸ்டைலில் கைவரிசை காட்டியிருக்கிறார்கள். திருடிய பொருள்களை தங்களின் சொந்த ஊர்களுக்கு பார்சல்களில் அனுப்பி வைத்திருக்கிறார்கள். அதை ஊரில் உள்ள இவர்களின் உறவினர்கள் அவற்றை விற்று பணமாக்கிவிடுவார்கள். இவர்களிடமிருந்து ஒரு கார், ஒரு கத்தி, பாக்கெட் வைத்து தைக்கப்பட்ட இரண்டு பாவாடைகளைப் பறிமுதல் செய்திருக்கிறோம். தொடர்ந்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *