சென்னையில் மாநகரப் பேருந்து, மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயில் ஆகியவை பொதுப் போக்குவரத்து சேவைகளாக உள்ளன. இந்த போக்குவரத்து சேவைகளை நாள்தோறும் 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த மூன்று போக்குவரத்து சேவையையும் ஒருங்கிணைத்து ஒரே டிக்கெட் மூலம் பயணம் செய்வதற்காக ’சென்னை ஒன்’ என்ற செயலியை சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் உருவாக்கி வந்தது.
இந்த நிலையில், ’சென்னை ஒன்’ செயலியை மக்கள் பயன்பாட்டுக்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை அறிமுகம் செய்துவைத்தார்.
இந்த செயலியில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அமைந்துள்ள 600 பேருந்து நிறுத்தங்கள், 650 பேருந்து வழித்தடங்கள், 3,500 பேருந்துகளின் தகவல்கள், மெட்ரோ மற்றும் புறநகர் ரயில்களின் நிறுத்தங்கள் உள்ளிட்ட உள்ளீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.