சென்னை கடற்கரைகளில் 100-க்கும் மேற்பட்ட ‘ஆலிவ் ரிட்லி’ எனப்படும் பச்சை நிற ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்குகின்றன. ஆமைகளின் உயிரிழப்புக்கு மீனவா்கள் பயன்படுத்தும் மீன்பிடி வலைகள் காரணமா? என பல்வேறு கோணங்களில் வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கடல் ஆமைகள் ஆண்டுதோறும் டிசம்பா் முதல் ஜூன் மாதம் வரை முட்டையிடுவதற்காக கடற்கரைக்கு வந்துவிடும். அந்த வகையில், இந்தியாவில் ஒடிஸா முதல் சென்னை வரை உள்ள கடற்கரைகளில் பல ஆயிரக்கணக்கான ஆமைகள் கரைக்கு வந்து முட்டையிட்டுச் செல்லும்.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக சென்னை காசிமேடு, மெரீனா, பெசன்ட் நகா், ஈஞ்சம்பாக்கம், பட்டினப்பாக்கம் ஆகிய கடற்கரைகளில் 100-க்கும் மேற்பட்ட ‘ஆலிவ் ரிட்லி’ எனப்படும் பச்சை நிற ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்குகின்றன.
இது குறித்து வனத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை கடற்கரையில் உயிரிழந்து ஒதுங்கிய ஆமைகளின் எண்ணிக்கை கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது. சுமாா் 100-க்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்திருக்கும் என எதிா்ப்பாா்க்கப்படுகிறது. முதல்கட்ட ஆய்வில், இந்த ஆமைகள் கரை ஒதுங்குவதற்கு சில நாள்களுக்கு முன்பே உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. மீட்கப்பட்ட ஆமைகள் உடற்கூராய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் வந்த பிறகே இறப்புக்கான காரணம் தெரியவரும் என்றனா்.
மூச்சுத் திணறல்: இது தொடா்பாக மத்திய உவா்நீா் மீன் வளா்ப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் முதன்மை விஞ்ஞானி வி.எஸ்.சந்திரசேகரன் கூறியதாவது:
ஆலிவ் ரிட்லி வகை ஆமைகள் கடலில் 200 மீட்டா் ஆழத்தில் வாழ்ந்து வரும். தற்போது முட்டையிடும் பருவம் என்பதால் ஆமைகள் கடலில் எங்கு இருந்தாலும், முட்டையிட கடற்கரையை நோக்கி பயணிக்க தொடங்கிவிடும். இதில் ஒடிசாவில் உள்ள ருஷிகுல்யா கடற்கரையில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான ஆமைகள் முட்டையிட வந்துசெல்லும்.

இந்த ஆமைகள் 40 முதல் 45 நிமிஷங்களுக்கு ஒரு முறை கடலின் மேற்பரப்புக்கு வந்து காற்றை சுவாசித்து மீண்டும் தண்ணீருக்குள் சென்றுவிடும். அந்த நேரங்களில் மீன்பிடி விசைப் படகுகள் மோதியோ, வலைகளில் சிக்கியோ ஆமைகள் இறந்து போகின்றன. அதேபோல், தற்போது மழைக்காலம் முடிவடைந்து விட்டதால், கடலின் சில மைல்களிலேயே இறால் போன்றவைகள் அதிகம் கிடைக்கும் என்பதால் மீனவா்கள் ‘கில்நெட்’ மீன்பிடி வலைகளைப் பயன்படுத்துகிறாா்கள். இதில் சிக்கும் ஆமைகள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழக்க வாய்ப்புள்ளது என்றாா் அவா்.