புயல் கரையைக் கடக்கும் போது சென்னை ஓ.எம்.ஆர். மற்றும் ஈசிஆர் சாலையில் நாளை பொது போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஃபென்ஜால் (FENGAL) புயல் 30.11.2024 அன்று கரையை கடக்கும் போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அதிகனமழையுடன் 60 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே,
கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு, தேர்வு போன்ற எந்த நிகழ்வுகளும் நடத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட இதர மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தேவைக்கேற்ப முடிவெடுக்க அறிவுறுத்தப்படுகிறது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (Work from Home)
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை நாளை (30.11.2024) வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பொதுப் போக்குவரத்து தற்காலிக நிறுத்தம்
30.11.2024 அன்று பிற்பகல் புயல் கரையை கடக்கும் போது கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் ஓ.எம்.ஆர். சாலையில் பொது போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும்.