சென்னை கிழக்கு கடற்கரை சாலை, கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் என்கிற பார்த்தசாரதி(42). இவரின் மனைவி ஜமுனா(35). இவர்களது எதிர் வீட்டில் சுசில் (32), அவரின் மனைவி கிரிஜா(29) ஆகியோர் குடியிருந்து வந்தனர். அதனால் பார்த்தசாரதியின் குடும்பமும் சுசில் குடும்பமும் பழகி வந்தனர்.
இந்தநிலையில் பார்த்தசாரதியின் மனைவி ஜமுனாவுடன் சுசில் நெருங்கிப் பழகி வந்தார். அதை பார்த்தசாரதி கண்டித்தார். அதனால் பார்த்தசாரதிக்கும் ஜமுனாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கணவரைப் பிரிந்து ஜமுனா சென்றுவிட்டார். மனைவி பிரிந்ததற்கு சுசில்தான் காரணம் என பார்த்தசாரதி கருதினார். அதைத் தொடர்ந்து சுசிலுக்கும் பார்த்தசாரதிக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் 15.02.2026- ம் தேதி மது போதையில் பைக்கில் பார்த்தசாரதி வீட்டுக்கு வந்தார். அப்போது அங்கு சுசில், தன்னுடைய பைக்கை அங்கு நிறுத்தியிருந்தார். அதனால் பார்த்தசாரதியால் பைக்கை அங்கு நிறுத்த முடியவில்லை. அதனால் பார்த்தசாரதி, சுசில் வீட்டுக்குச் சென்று வாக்குவாதம் செய்தார். அப்போது சுசிலும் பார்த்தசாரதியுடன் தகராறு செய்தாகக் கூறப்படுகிறது.
அதனால் ஆத்திரமடைந்த பார்த்தசாரதி, தன்னுடைய வீட்டுக்குள் சென்று கத்தியை எடுத்துக் கொண்டு வந்தார். பின்னர், சுசிலின் வயிற்றில் கத்தியால் குத்தினார். அதனால் அலறிய சுசிலின் சத்தம் கேட்டு அங்கு வந்த கிரிஜா, பார்த்தசாரதியை தடுக்க முயன்றார். அதனால் கிரிஜாவையும் பார்த்தசாரதி கத்தியால் குத்தினார். இருவரும் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தனர். பின்னர் பார்த்தசாரதி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். உயிருக்குப் போராடிய கணவன் மனைவியை மீட்ட அக்கம் பக்கத்தினர் இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதோடு கானாத்தூர் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.