பின்னர் தரணிகுமாரை என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரின் திருவான்மியூர் வீடும் பூட்டியிருந்தது. கிளாம்பாக்கத்தில் கடை ஒதுக்கீடு செய்வதாகக் கூறி என்னை ஏமாற்றிய தரணிகுமார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
ஏழுமலையை தொடர்ந்து வெங்கடேஷ், பாண்டியராஜன் என சிலர் தரணிகுமாரிடம் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய கடைக்காக சில லட்சங்களைக் கொடுத்து ஏமாந்திருக்கிறார்கள். அவர்களும் இணை கமிஷனரிடம் புகார்களை தனித்தனியாக கொடுத்திருக்கிறார்கள்.
புகார் கொடுக்க வந்த பாண்டியராஜனிடம் பேசினோம். “நான் பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறேன். 2023-ம் ஆண்டு என்னுடைய கடைக்கு சாப்பிட வந்த தரணிகுமாருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர், என்னை நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று அடிக்கடி சொல்வார். 2024-ம் ஆண்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கடைகளை ஒதுக்கீடு செய்யும் அதிகாரிகள் தனக்குத் தெரியும் என தரணிகுமார் என்னிடம் கூறினார்.
பின்னர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு அழைத்துச் சென்று எந்தகடை வேண்டும் என காண்பித்தார். அதனால் அவர் மீது எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து எனக்கு தெரிந்த சிலரை தரணிகுமாருக்கு அறிமுகம் செய்து வைத்தேன். நாங்கள் அனைவரும் சேர்ந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கடையை பெற 9 லட்சம் ரூபாய் வரை தரணிகுமாரிடம் கொடுத்து ஏமாந்து நிற்கிறோம். தரணிகுமார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து எங்களின் பணத்தை மீட்டு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, “புகார் கொடுத்தவர்கள் வங்கி மூலமாகவும் ரொக்கமாகவும் தரணிகுமாரிடம் பணத்தைக் கொடுத்திருக்கிறார்கள். அதுதொடர்பாக தரணிகுமாரிடம் விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
தரணிகுமாரின் பின்னணி குறித்து விசாரித்தபோது அவர், ஏற்கெனவே அ.தி.மு.கவில் முதல்வராக இருந்த ஒருவரின் மகன், எம்.பி-யாக இருந்தபோது அவரின் பெயரைச் சொல்லி ஏமாற்றும் வேலையில் ஈடுபட்டு வந்திருக்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரிடம் 8 லட்சம் ரூபாயை ஏமாற்றிய குற்றச்சாட்டில் சிக்கினார். இதுதவிர வி.வி.ஐ.பி-க்களுக்கு சில சட்ட விரோத செயல்களிலும் தரணிகுமார் ஈடுபட்டு வருகிறார். தற்போது சென்னையில் உள்ள மூத்த அமைச்சர் ஒருவரின் விசுவாசி என்று தன்னை அடையாளம் காட்டிக் கொடுத்து மோசடியில் ஈடுபட்டு வருகிறார். அதனால்தான் போலீஸார், எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்ற தகவலும் கிடைக்கிறது. இந்த முறையாவது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது மட்டுமே கேள்வி?