நாமக்கல் மாவட்டம், பாப்பம்பாளையம், கோம்பை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கோகில் ஆனந்தம் (45). இவர். பா.ஜ.க-வின் சமூக ஊடகப் பிரிவில் நாமக்கல் மேற்கு மாவட்ட துணைத் தலைவராக உள்ளார். அதோடு ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவரின் தோழியான பூங்குழலி, பா.ஜ.க-வின் நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் பூங்குழலி, தன்னுடைய காரை எடுத்துச் சென்றுவிட்டதாக சென்னை பெரியமேடு காவல் நிலையத்தில் கோகில் ஆனந்தம் புகார் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது, “நானும் பூங்குழலியும் பள்ளி பருவத்திலிருந்தே நண்பர்களாக இருந்து வருகிறோம். 26.03.2025-ஆம் தேதி என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பூங்குழலி, சட்டமன்றத் தேர்தலில் திருச்செங்கோடு தொகுதி எனக்கு கிடைக்க பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி என்பவர் உதவுவதாகக் கூறியிருக்கிறார். அதோடு அவருக்குத் தெரிந்த முக்கிய நபர் டெல்லியிலிருந்து சென்னைக்கு வருகிறார். அதனால் அவரைச் சந்தித்துப் பேசினால் எம்.எல்.ஏ சீட் கிடைத்துவிடும் எனக் கூறியிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து என்னுடைய காரில் பூங்குழலி, தமிழ்ச்செல்வி, நான் என மூன்று பேரும் சென்னைக்கு 27.03.2026- ம் தேதி வந்து பெரியமேடு பகுதியில் உள்ள லாட்ஜில் இரண்டு அறைகளை எடுத்து மூன்று பேரும் தங்கினோம். அப்போது பூங்குழலியும் தமிழ்ச்செல்வியும் இந்த லாட்ஜ்ஜில் அறை சரியில்லை அதனால் வேறு லாட்ஜை பார்த்து விட்டு வருவதாகக் கூறி என்னுடைய காரை எடுத்துக் கொண்டு சென்றனர். அதன் பிறகு அவர்கள் வரவில்லை. இருவரையும் செல்போனில் தொடர்பு கொண்ட போதும் பதிலளிக்கவில்லை. எனவே என்னுடைய காரை மீட்டுத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்”‘ என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் பெரியமேடு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். காரை எடுத்துச் சென்ற பூங்குழலி, தமிழ்ச்செல்வியை தொடர்பு கொண்டு போலீஸார் கேட்டதற்கு, சென்னை வந்து என்ன நடந்தது என்பதை சொல்கிறோம் என்று கூறியிருக்கிறார்கள். அவர்களிடம் விசாரித்த பிறகே உண்மை தெரியவரும் என பெரியமேடு போலீஸார் தெரிவித்தனர்.