விசாரணையில் இவர்கள் மூன்று பேரும் சென்னையில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி, தனியார் பேருந்து ஓட்டுநராக வேலை செய்து வருவது தெரியவந்தது. இதில் முகமது அப்துல் ரகுமான் மூலம் லோகநாதனை மதுரவாயல் வரவழைத்து இந்த வழிப்பறியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்களிடமிருந்து லோகநாதனின் செல்போன், பைக்கை போலீஸார் மீட்டனர். பின்னர் குற்றச் செயலுக்குப் பயன்படுத்திய 4 செல்போன்கள், கத்தியையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப்பிறகு மூன்று பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து வானகரம் போலீஸார் கூறுகையில், “தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் லோகநாதன், பார்த்த செல்போன் செயலி மூலம் அறிமுகமான முகமது அப்துல் ரகுமான், தன்னை ஒரு பெண் என்று கூறியிருக்கிறார். அதோடு இருவரும் தனிமையில் சந்திக்கலாம் எனக் கூறி லோகநாதனை மதுரவாயல் பகுதிக்கு வரவழைத்திருக்கிறார். அதை நம்பி சென்ற லோகநாதனிடம் முகமது அப்துல் ரகுமான், பேசிக் கொண்டிருக்கும்போதுதான் அவரின் கூட்டாளிகளான சரத்குமாரும் திருமலைவாசனும் அங்கு வந்து லோகநாதனை மிரட்டியும் தாக்யும் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட முகமது அப்துல் ரகுமான், சரத்குமார், திருமலைவாசன் ஆகியோரின் செல்போன்களை ஆய்வு செய்து வருகிறோம்”‘ என்றனர்.