சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி: அவசியம் தரிசிக்க வேண்டிய ஆழ்வார்கள் கொண்டாடிய வேங்கடகிருஷ்ணன்! | chennai tiruvallikeni parthasarathy temple

Spread the love

தசாவதாரங்களில் கிருஷ்ணாவதாரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்த அவதாரத்தில்தான் அவர் பக்தனுக்கு சாரதியானதோடு பகவத் கீதையும் உபதேசம் செய்தார். அப்படிப் பார்த்த சாரதியாகப் பெருமாள் அருளும் திருத்தலம்தான் திருவல்லிக்கேணி ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் திருக்கோயில். தேரோட்டிய திருக்கோலத்திலேயே கருவறையில், நின்ற திருக்கோலத்தில் மீசையுடன் கம்பீரமாக சேவை சாதிக்கிறார் பெருமாள்.

திருமாலின் பக்தரான சுமதிராஜன், தேரோட்டியாக இருந்த கண்ணனாக பெருமாளைத் தரிசிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். அவன், பெருமாளை வேண்ட, அவரும் இங்கு தேரோட்டியாகக் காட்சி தந்தார். அதே கோலத்தில் இங்கேயே கோயிலும் கொண்டார் என்கிறது தலவரலாறு.

பாரதப் போரில் சாரதியாக இருந்த பெருமாள், `ஆயுதம் எதையும் எடுப்பதில்லை” என்று செய்த சபதத்திற்கு ஏற்ப இங்கே ஒரு கையில் சங்கு மட்டுமே ஏந்தி இருக்கிறார். உற்சவ மூர்த்தி கதாயுதம் இல்லாமல் செங்கோலுடன் காட்சி தருகிறார்.

இங்குள்ள மூலவரை வியாச முனிவர் பிரதிஷ்டை செய்தார் என்கிறது தல புராணம். அகத்திய முனிவர் பிரதிஷ்டை செய்ததாகவும் ஒரு கருத்து உண்டு.

எப்போதும் மீசையுடன் பெருமாள் காட்சிகொடுக்கும் அழகு மனம் நிறைப்பது. எனவே இவரை `மீசைப் பெருமாள்’ என்றும் அழைப்பர்கள். வைகுண்ட ஏகாதசி விழாவின் போது, பகல் பத்து, ஆறாம் நாளில் இருந்து பத்தாம் நாள் வரையிலும் ஐந்து நாள்கள் மட்டும் இவரை மீசையில்லாமல் தரிசிக்கலாம்.

இங்குள்ள ரங்கநாதர் தலைக்கு அருகில் வராகரும், கால் அருகில் நரசிம்மரும் இருக்கின்றனர். ரங்கநாதர், இங்கு தாயாரைத் திருமணம் செய்துகொள்ள வந்தபோது நரசிம்மரும் வராகரும் உடன் வந்தனர் என்பதால் இப்படி உள்ளதாம். இந்த ரங்கநாதரை, தாயார் `ஸ்ரீமந்நாதா’ என்றழைத்தார். எனவே இவருக்கு `ஸ்ரீமந்நாதர்’ என்ற பெயரும் உண்டு.

பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த திருக்கோயிலில் அமைந்திருக்கும் சந்நிதிகள் ஒவ்வொன்றும் பழைமையும் மகிமையும் வாய்ந்தவை. இங்கே உற்சவரின் திருநாமமே பார்த்தசாரதி என்பது.

கருவறையில் ஸ்ரீவேங்கட கிருஷ்ணன் என்கிற திருநாமத்தோடு பெருமாள் எழுந்தருளியிருக்கிறார். வலப்புறத்தில் ருக்மணி பிராட்டியாரும், வரத முத்திரையுடன் கையில் கலப்பை ஏந்திய அண்ணன் பலராமனும், இடப்புறத்தில் தம்பி சாத்யகி, மகன் ப்ரத்யும்னன், பேரன் அநிருத்தன் ஆகிய அனைவரோடும் இணைந்து, கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார் பெருமாள்.

எனவே இவரைக் ‘குலம் காக்கும் பெருமாள்’ என்று போற்றுகிறார்கள். உற்சவரான பார்த்தசாரதி பெருமாளைச் சரணடைந்தால் நம் வாழ்க்கைத் தேரை நலமுடன் செலுத்தி அருள்பாலிப்பார் என்பது நம்பிக்கை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *