சென்னை, திருவள்ளூர், செங்கை, காஞ்சி பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை மழை விடுமுறை | Heavy rain warning: 4 district schools and colleges including Chennai will be Holiday tomorrow

1326165.jpg
Spread the love

சென்னை: அதி கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, நாளை (அக்.16) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த நான்கு மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாளை (அக்.16) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

எனினும், அத்தியாவசிய சேவை துறைகளான காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, உள்ளாட்சி நிர்வாகத் துறைகள், பால் வளத்துறை, குடிநீர் வழங்கல் துறை, மருத்துவமனைகள், மருந்தகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், மின்சாரத் துறை, காய்கறிகள் மற்றும் இதர அத்தியாவசிப் பொருட்களுக்கான போக்குவரத்து, மாநகர போக்குவரத்து, சென்னை மெட்ரோ ரயில், MRTS, ரயில்வே, விமான நிலையம், விமான போக்குவரத்து, பெட்ரோல் பங்குகள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மற்றும் பேரிடர் மீட்பு நிவாரண பணிகள் மேற்கொள்ளும் துறைகள் ஆகியவை வழக்கம் போல் இயங்கும். பிற கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும்.

நாளை (அக்.16) மிக அதிகனமழை எதிர்பார்க்கப்படுவதை முன்னிட்டு, சென்னையில் உள்ள தனியார் அலுவலகங்கள் மிகக் குறைந்தபட்ச பணியாளர்களைக் கொண்டோ அல்லது தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தே பணியாற்றும்படியோ அறிவுரை வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறது, என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

அதி கனமழை எச்சரிக்கை: அக்.16-ம் தேதி, வடதமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக் கூடும்.

வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. > முழு விவரம்: தொடங்கியது வடகிழக்கு பருவமழை: அடுத்த இரு தினங்களுக்கு எங்கெல்லாம் கனமழை?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *