சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத் துறை இயக்ககத்தில் டெங்கு மரபணு பகுப்பாய்வு கூடம் 3 நாட்களில் பயன்பாட்டுக்கு வரும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 2021-ம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றபோது, கரோனா பெருந்தொற்று மிகப்பெரிய அளவில் இருந்தது. கரோனா பாதிப்பு மாதிரிகளை நாம் ஆய்வு செய்ய வேண்டும் என்றால் பெங்களூரு, ஐதராபாத், புனேவுக்கும் அனுப்ப வேண்டியிருந்தது.
இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இந்தியாவிலேயே முதன்முறையாக, மாநில அரசே மரபணு பகுப்பாய்வு கூடத்தை நிறுவ முடி வெடுக்கப்பட்டு, 2021-ம் ஆண்டு செப்.14-ம் தேதி ரூ.4 கோடி செலவில் மரபணு பகுப்பாய்வு ஆய்வகம் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்ககத்தில் (டிபிஎச்) அமைத்து திறந்து வைக்கப்பட்டது. தற்போது இங்கு பொதுமக்களுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய டெங்கு வைரஸைக் கண்டறிந்து, ஆய்வு செய்து, தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அந்த வகையில் டெங்கு மரபணு ஆராய்ச்சியில் பயன்படுத்த ஏதுவாக அதற்குரிய வேதிப்பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு, இன்னும் 3 நாட்களில் டிபிஎச்இயக்குநரகத்தில் டெங்கு வைரஸ் மரபணு ஆய்வு தொடங்கப்படவுள்ளது. தமிழகத்தில் 2012-ம் ஆண்டு டெங்கு பாதிப்புகளினால் 66 பேரும், 2017-ல் 65 பேரும் இறந்துள்ளனர். கடந்த ஆண்டு உலகம் முழுவதும் 80 நாடுகளில் வீரியமிக்க டெங்கு பரவி அச்சுறுத்தல் ஏற்படுத்தியது. எனவே, டெங்குவின் வீரியம் குறித்து ஆய்வு செய்வது அவசியமான ஒன்றாகும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.