அதன்பிறகு திலீப், தன்னை பெரிய பிசினஸ்மேன் எனக் காட்டிக் கொண்டு அவரசமாக வருமான வரி செலுத்த வேண்டும். அதற்கு சில லட்சம் ரூபாய் தேவை என தொழிலதிபரின் மனைவியிடம் கேட்டிருக்கிறார். உடனே அவரும் வீட்டிலிருந்த தங்க நகைகளை திலீப்பிடம் கொடுத்து உதவியிருக்கிறார். இவ்வாறு தொழிலதிபரின் மனைவியிடமிருந்து திலீப், 850 கிராம் தங்க நகைகள், 120 கிராம் வைர நகைகள், இரண்டரை கிலோ வெள்ளி பொருள்கள் மற்றும் சில லட்சம் ரூபாய் ஆகியவற்றை வாங்கியிருக்கிறார்.
தொழிலதிபரின் மனைவியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த அவரின் குடும்பத்தினர் தங்க நகைகள், வைர நகைகள் குறித்து கணக்கு கேட்டிருக்கிறார்கள். உடனே தொழிலதிபரின் மனைவி, விவரத்தை திலீப்பிடம் கூறி கொடுத்த பணம், நகைகளை திரும்ப கேட்டிருக்கிறார். அப்போதுதான் திலீப் தன்னுடைய சுயரூபத்தை வெளியில் காண்பித்திருக்கிறார். என்னிடம் பணமும் நகையும் இல்லை. அதையும் மீறி கேட்டால் நீயும் நானும் தனிமையிலிருந்த வீடியோக்களை உன் குடும்பத்தினரிடம் காண்பித்துவிடுவேன் என மிரட்டத் தொடங்கியிருக்கிறார்.
அதனால் இருதலைக் கொள்ளி எறும்பாக தவித்த தொழிலதிபரின் மனைவி, ஒரு கட்டத்தில் குடும்பத்தினரிடம் விவரத்தைக் கூறி மன்னிப்பு கேட்டிருக்கிறார். அதன்பிறகே வேப்பேரி காவல் நிலையத்தில் தொழிலதிபரின் மனைவி தரப்பில் புகதாரளிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தகவல் தெரிந்ததும் திலீப், வடமாநிலத்துக்கு தப்பிச் சென்றுவிட்டார். தொழிலதிபரின் மனைவியிடமிருந்து நகைகள், பணத்தைப் பறித்ததில் திலீப்பின் அம்மா சங்கீதா, இன்னொரு மகன் அங்கித் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. அதனால் சங்கீதா, அங்கித்தை போலீஸார் கைது செய்து விசாரித்தனர்.
பின்னர் அவர்களிடமிருந்து 2 ஐபோன்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சங்கீதா, தன்னுடைய மகன் திலீப் மூலம் இந்த நூதன மோசடியில் ஈடுபட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. தலைமறைவாக இருக்கும் திலீப் மீது ஏற்கெனவே சில குற்ற புகார்கள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்திருக்கிறது. இருப்பினும் அவர் கைது செய்யப்பட்ட பிறகே முழு விவரம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.