சென்னை: நகைக்காகக் பெண் கொலை – இளைஞர் சொன்ன அதிர்ச்சி தகவல்! – lady murdered and youth arrested in chennai

Spread the love

சென்னை, அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (55). இவரின் மனைவி அமுதா (53). கடந்த 8-ம் தேதி மாலை சீனிவாசனின் வீட்டிலிருந்து ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது. அதோடு வீட்டுக்குள் இருந்து புகையும் வந்தது. உடனே சீனிவாசனின் வீட்டுக்கு அருகில் வசிப்பவர்கள், காவல் கட்டுப்பாட்டறைக்கும் சீனிவாசனுக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு சீனிவாசன் விரைந்து வந்தார். அதோடு போலீஸாரும் அங்கு வந்து விசாரித்தனர். பொதுமக்களின் உதவியோடு சீனிவாசனின் வீட்டுக்குள் நுழைந்து பார்த்தபோது அங்கு அமுதா, தீயில் கருகிய நிலையில் சடலமாக கிடந்தார்.

அதைப்பார்த்து சீனிவாசன் அதிர்ச்சியடைந்ததோடு கதறி அழுதார். பின்னர் போலீஸார், அமுதாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அமுதாவின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், அவரை யாரோ கத்தியால் குத்திக் கொலை செய்திருக்கும் தகவலை போலீஸாரிடம் தெரிவித்தனர். அதனால் கொலை வழக்கு பதிந்த போலீஸார், அமுதாவை கொலை செய்து தீ வைத்து எரித்தது யார் என விசாரித்தனர். போலீஸாரின் சந்தேக பார்வை, அண்ணாநகரைச் சேர்ந்த சாந்தகுமார் என்ற இளைஞர் மீது விழுந்தது. இவர் சீனிவாசனின் டீக்கடையில் வேலைப்பார்த்து வருவதும் தெரியவந்தது. அமுதா கொலை குறித்து சீனிவாசனிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து போலீஸார் கூறுகையில், “சம்பவத்தன்று மதியம் சீனிவாசன், கடையிலிருந்து வீட்டுக்கு சாப்பிடச் சென்றிருக்கிறார். அப்போது கடையில் அமுதா இருந்திருக்கிறார். சீனிவாசன், கடைக்கு வந்த பிறகு மாலையில் அமுதா வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அவரைத் தொடர்ந்து சாந்தகுமாரும் வெளியில் சென்றார். அமுதா வீட்டிலிருந்தபோது அங்கு வந்த சாந்தகுமார், அமுதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். பின்னர் அமுதா அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்துவிட்டு அவரைக் கத்தியால் குத்தி கொலை செய்து தீ வைத்து எரித்திருக்கிறார். சாந்தகுமாரிடமிருந்து அமுதாவின் தங்க நகைகளை பறிமுதல் செய்திருக்கிறோம். நகைக்காக அமுதாவை கொலை செய்ததாக சாந்தகுமார் சொல்கிறார். அதுதொடர்பாக விசாரித்து வருகிறோம். விசாரணைக்குப் பிறகு சாந்தகுமார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *