சனா பாத்திமா பேசுகையில், “எனக்கும் என் கணவருக்கும் இடையே பல பிரச்னைகள் இருக்கின்றன. அதனால் தனியாக அம்மா வீட்டில் வசித்து வருகிறேன். விவாகரத்து கேட்டிருக்கிறேன். சில தினங்களுக்கு முன்பு என்னுடைய கணவர் முகமது அலி என்னை தாக்கினார். அதனால் எனக்கு முகத்தில் காயம் இருந்ததால், என் தங்கையின் இல்ல நிகழ்ச்சிக்குக்கூட நான் செல்லவில்லை. வீட்டில் பூட்டு இல்லாததால் அதை வாங்க கடைக்குச் சென்றேன். அப்போது என் வீட்டின் அருகே முகமது அலி நின்றுக் கொண்டிருந்தார். அவர், என்னிடம் குழந்தையை பார்க்க வேண்டும் என்று கூறினார். உடனே நான், தங்கையின் வீட்டு நிகழ்ச்சிக்கு குழந்தை சென்றிருக்கிறாள் என்று கூறினேன். அதனால் ஆத்திரமடைந்த முகமது அலி, நீ அழகாக இருப்பதால்தானே வெளியில் வேலைக்குச் செல்கிறாய் என்று கூறியபடி ஆசீட்டை முகத்தில் வீசிவிட்டார். எரிச்சலால் வலியால் துடித்தேன். என்னுடைய இடது கண்ணில் பார்வை தெரியவில்லை. காவல் நிலையத்திலும் புகார் கொடுத்திருக்கிறேன். முகமது அலி தலைமறைவாகி விட்டதாக போலீஸார் சொல்கிறார்கள். எனக்கு பயமாக இருக்கிறது” என்றார் கண்ணீர்மல்க

இதுகுறித்து பல்லாவரம் போலீஸாரிடம் கேட்டதற்கு, “சனா பாத்திமா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் எங்களுக்கு அங்கிருந்து தகவல் வந்தது. உடனடியாக மருத்துவமனைக்கே சென்று சனா பாத்திமாவிடம் என்ன நடந்தது என்று விசாரித்ததோடு வழக்கும் பதிவு செய்திருக்கிறோம். சனா பாத்திமா தப்பி ஓடி வரும் சி.சி.டி.வி. கேமரா காட்சியை ஆதாரமாக எடுத்திருக்கிறோம். அதனால் சட்டப்படி முகமது அலி மீது நடவடிக்கை எடுக்கப்படும். கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் ஆசீட்டை முகமது அலி பயன்படுத்தியிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது” என்றனர்.