சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில் இனி கோவில்பட்டியில் நின்று செல்லும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு | Chennai-Tirunelveli Vande Bharat Express to Halt at Kovilpatti from October 9, 2025

1379113
Spread the love

கோவில்பட்டி: சென்னை – திருநெல்வேலி இடையே இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில் நாளை (அக்.9) முதல் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே துறை அறிவித்துள்ளது.

தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் சென்று திரும்பும் விதமாக, வந்தே பாரத் ரயில் சேவை கடந்த 2023-ம் ஆண்டு செப்.24-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடைகிறது. மறுமார்க்கமாக, எழும்பூரில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு திருநெல்வேலியை அடையும் வகையில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டவுடன் எந்தெந்த ரயில் நிலையங்கள் நின்று செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அப்போது அதில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நிற்காது என்பது தெரியவந்ததும், கனிமொழி எம்.பி., மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சட்டப்பேரவை உறுப்பினர் கடம்பூர் செ.ராஜூ, மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ உள்ளிட்டோர், வணிக நகரான கோவில்பட்டியில் வந்தே பாரத் ரயில் நின்று செல்ல வேண்டும் என மத்திய ரயில்வே துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.

அதேபோல் பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் சென்னை – திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் இரு மார்க்கங்களிலும் கோவில்பட்டியில் நின்று செல்ல வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும், கடந்த 10 நாட்களுக்கு முன்பு தீப்பெட்டி தொழில் நூற்றாண்டு விழாவுக்காக கோவில்பட்டி வருகை தந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், எம்.எல்.ஏ. கோரிக்கை மனு வழங்கினார்.

இந்நிலையில், சென்னை எழும்பூர் – திருநெல்வேலி வந்து பாரத் ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல ரயில்வே வாரியம் பரீட்சார்த்த முறையில் அனுமதி வழங்கி உள்ளது. இதனை கோவில்பட்டி, விளாத்திகுளம் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள், வணிகர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் வரவேற்றுள்ளனர்.

இதற்கிடையே, சென்னை – திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் (20665/20666) நாளை (அக்.9) முதல் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்லும். காலை 6.05 மணிக்கு திருநெல்வேலியில் புறப்பட்டு, கோவில்பட்டிக்கு 6.38 மணிக்கு வந்து, அங்கிருந்து 6.40 மணிக்கு புறப்படும். காலை 7.18 மணிக்கு விருதுநகர் சென்று, அங்கிருந்து 7.20 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து நாளை காலை கோவில்பட்டி ரயில் நிலையத்தில் அதிமுக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் வந்தே பாரத் ரயிலை வரவேற்க தயாராகி வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *