எப்படி இருக்கிறது இரவு நேர காப்பகம்?
2,400 சதுர அடிப் பரப்பில், 86 லட்சம் ரூபாய் மதிப்பில், இரவு நேர காப்பகம் கட்டப்பட்டுள்ளது. 80 பேர் ஒரே நேரத்தில் தங்கும் வகையில் இருக்கும் இந்தக் கட்டடம் கழிப்பறை, மின்விசிறி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் நல்ல காற்றோட்டமான சூழலில் கட்டப்பட்டுள்ளது. இவர்களுக்கு மாநகராட்சியின் சார்பாக பாய், போர்வை, தலையணை உள்ளிட்ட 15 அத்தியாவசிய பொருள்களும் தரப்பட்டிருக்கின்றன. தங்குபவர்களுக்கு மூன்று வேளையும் அம்மா உணவகங்கள் மூலம் உணவு வழங்கப்படுகிறது. இது குறித்து அங்கு விசாரித்தபோது, அது மெரினாவில் தங்கியுள்ள அனைத்து ஆதரவற்ற மக்களுக்குமானதல்ல என்பது தெரிந்தது. நாடோடிச் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் 70 பேர் நீண்ட நாள்களாக மெரினாவில் வசித்து வருகிறார்கள். அந்த மக்களின் கோரிக்கையை ஏற்று, சென்னை மாநகராட்சி அவர்களுக்கென இரவு நேர காப்பகத்தை அமைத்துக் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.
இது குறித்து இரவு நேர காப்பகத்தில் தங்கியிருக்கும் சரவணன் நம்மிடம் பேசும்போது,
“எங்களது பூர்வீகம் வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதி. பிழைப்புக்காக சென்னை நோக்கி வந்தோம். கிட்டத்தட்ட15 ஆண்டுகளாக வியாபாரம் செய்து, இந்த மெரினா பீச்சையே எங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டு நாள்களைக் கடத்திக் கொண்டிருந்தோம். இந்த பீச்சை நம்பியே எங்களின் வாழ்வாதாரம் இருக்கிறது. கடந்த ஆண்டு நாங்கள் சென்னை மண்டல துணை ஆணையரை மெரினா கடற்கரையில் சந்தித்துப் பேசினோம். மேலும் இரவு நேரங்களில் தங்குவதற்கு தற்காலிக தங்குமிடத்தையாவது ஏற்படுத்தித் தாருங்கள் என்று கோரிக்கை வைத்தோம். இதற்கு முன்பு கண்ணகி சிலையின் பின்புறம் தார்ப்பாய் கொண்டு குடிலாக அமைத்து இரவு நேரம் கழிப்பறை வசதி இல்லாமல், தூங்குவதற்கு வசதி இல்லாமல், குழந்தைகளை வைத்துக்கொண்டு பெரும் சிரமப்பட்டோம். நாங்கள் அன்றாடங்காய்ச்சிகள். தினமும் வரும் வருமானத்தைக் கொண்டுதான் எங்கள் வாழ்க்கையை ஓட்டுகிறோம். நாங்கள் எதிர்பார்த்ததை விட இங்கு எல்லா வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது” என்றார்.