சென்னை: பார்சலுக்குள் மண்டை ஓடு, எலும்புகள், விபூதி; அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்; களமிறங்கிய போலீஸ் | Chennai: Skull, bones, and body found inside parcel; shocked employees

Spread the love

சென்னை பாரிமுனை அரண்மனைக்காரன் தெருவில் உள்ள கடைக்கு 20-ம் தேதி ஹெல்மெட் அணிந்து வந்த இளைஞர் ஒருவர், பார்சல் ஒன்றை வாட்ச்மேன் கிருஷ்ணா லால் என்பவரிடம் கொடுத்து, “இது உங்கள் கடையில் வேலை செய்யும் ஸ்ருதி என்பவருக்கு வந்த பார்சல். அவரிடம் கொடுத்துவிடுங்கள்” என்று கூறிவிட்டு சென்றிருக்கிறார்.

பார்சலை வாங்கிய வாட்ச்மேன், கடையில் அக்கவுண்ட்டாக வேலை செய்யும் ஸ்ருதிக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். உடனே ஸ்ருதி, “இது எனக்கு வந்த பார்சல் இல்லை” எனக் கூறியிருக்கிறார்.

இதையடுத்து கடையின் உரிமையாளர் ஜித்தேந்தருக்கு வாட்ச்மேன் கிருஷ்ணலால் விவரத்தைக் கூறியிருக்கிறார். அதன்பிறகு கடையில் உள்ள ஊழியர்கள் அந்தப் பார்சலைத் திறந்து பார்த்திருக்கிறார்கள்.

அதில், மனித மண்டை ஓடு, 3 மனித எலும்புகள், விபூதி ஆகியவை இருந்தன. அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் யானைகவுனி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.

 மனித மண்டை ஓடு

மனித மண்டை ஓடு

உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் பார்சலைக் கைப்பற்றி காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்று ஸ்ருதியிடம் விசாரித்தனர். அப்போது அவர், தன்னுடைய கணவர் தினேஷ்குமார், மெடிக்கல் சர்ஜிக்கல் ரெப்ரன்சிட்டிவ்வாக வேலை செய்து வருகிறார். ஆனால் இந்தப் பார்சலுக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனக் கூறியிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து பார்சலைக் கொண்டு வந்த இளைஞர் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தபோது பைக்கில் வந்த இளைஞர், கடையிலிருந்து 50 மீட்டர் தூரத்திலேயே பைக்கை நிறுத்திவிட்டு முகம் தெரியாத வகையில் ஹெல்மெட் அணிந்து வந்திருக்கிறார். பைக்கின் பதிவு நம்பரைக் கொண்டு போலீஸார் விசாரித்து வருகிறார்.

பார்சல் கொண்டு வந்த இளைஞர் பிடிபட்டால் மட்டுமே முழு விவரம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *