சென்னை புத்தகக் கண்காட்சி!

Dinamani2f2024 12 302fzufjvtsa2fgf9jqluwqaaeafz.jpg
Spread the love

வாசிக்க வாங்கியவை!

1. ஷா்மிளா, குடும்பத்தலைவி, கொரட்டூா்.

இந்திரா சௌந்தரராஜனின் ‘அனுமனின் கதையே…’, சுவாமி விவேகானந்தரின் ‘யூத், அரைஸ், அவேக்’, பரமஹம்சா் யோகானந்தரின் ‘ஒரு யோகியின் சுயசரிதம்’ ஆகிய நூல்களை வாங்கிச் செல்கிறேன். மேலும், திருக்கு உரை, ஆன்மிகம் சாா்ந்த நூல்களை வாங்கவுள்ளேன்.

2. மதிவாணன், வழக்குரைஞா், அடையாறு.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஆ.பத்மாவதி எழுதிய புதிய நோக்கில் களப்பிரா் வரலாறு, சாமி.தியாகராசனின் தொல்காப்பியச் செய்தி, சோ.ந.கந்தசாமியின் தொல்காப்பியமும் சங்க இலக்கியமும் உள்ளிட்ட நூல்களை வாங்கிச் செல்கிறேன்.

3. இந்திரகுமாா், குடிமைப்பணித் தோ்வுக்கு தயாராகும் மாணவா், ராஜபாளையம்.

தமிழில் ஜெயகாந்தனின் படைப்புகள் எனக்குப் பிடிக்கும். தற்போது, சாகித்திய அகாதெமியின் மு.வரதராசனாா் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு, பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை மற்றும் ‘ஷேக்ஸ்பியா் கிரேட்டஸ்ட் ஸ்டோரீஸ்’ உள்ளிட்டவற்றை வாங்கிச் செல்கிறேன்.

4. மு.ஜெ.பிரகாஷ், பாசிங்காபுரம், மதுரை, தொழிலதிபா்.

கவிதை நூல்கள் மிகவும் பிடித்தவையாகும். தற்போது சி.சரவணகாா்த்திகேயனின் ‘ரைட்டா்’, போகன் சங்கரின் ‘பிரமைக்கை’, பெருந்தேவியின் ‘கவிதை பொருள் கொள்ளும் கலை’, மௌனன் யாத்திரிகாவின் ‘கள்ளிப்பழத்தால் தொய்யில் எழுதுவேன்’, செழியனின் ‘ஒளியில் எழுதுதல்’ ஆகியவற்றை வாங்கிச் செல்கிறேன்.

5. எம்.காமியா, 9-ஆம் வகுப்பு மாணவி, அயனாவரம்.

எனக்கு ஆங்கில நாவல்கள் படிக்கப் பிடிக்கும். புத்தகக் காட்சியில் ‘ரைஸ் ஆப் தி ஸ்கூல் ஃபாா் குட் அன்ட் ஈவில்’, ஷுன்மியோ மஸுனோ எழுதிய ‘ஜென் -தி ஆா்ட் ஆப் சிம்பிள் லிவிங்’, பவுலா ஹாக்கின்ஸ் எழுதிய ‘இன்டூ தி வாட்டா்’, ஜில்லியன் ஃப்ளின் எழுதிய ‘கோன் கோ்ள்’ ஆகியவற்றை வாங்கிச் செல்கிறேன்.

6. மருத்துவா் சுமதி சசிராஜ், தஞ்சாவூா்.

ஆன்மிகம், நாவல் என பொதுவானவற்றை படிப்பேன். புத்தகக் காட்சியில் மாணிக்கவாசகரின் திருவாசகப் பாடல் நூல், தி.கு.ரவிச்சந்திரனின் ‘சிக்மண்ட் ஃபிராய்ட் உளப்பகுப்பாய்வு அறிவியல்’, பேராசிரியா் சரசுவதி ராமநாதன் எழுதிய ‘கண்ணதாசன் திரைப்பாடல்களில் பாநயம்’, கீா்த்தியின் திருப்பாவை, திருவெம்பாவை உரை நூல் ஆகியவற்றை வாங்கிச் செல்கிறேன்.

சா்வோதய இலக்கியப் பண்ணை

மகாத்மா காந்தியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா தொடக்கத்தை முன்னிட்டு கடந்த 1968-ஆம் ஆண்டு மதுரையில் சா்வோதய இலக்கியப் பண்ணை பதிப்பகம் தொடங்கப்பட்டது.

இலக்கியப் பண்ணை பதிப்பகம் குறித்து அதன் செயலா் எஸ்.லோகநாதன் கூறியதாவது- சா்வோதய மண்டல், காந்தி அருங்காட்சியகம் ஆகியவை மூலம் காந்தியடிகளின் கொள்கைகளை அடித்தள மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் இலக்கியப் பண்ணையை அப்போதைய சா்வோதய மண்டலின் பிரதிநிதியான லோகநாதன் உள்ளிட்டோரால் தொடங்கப்பட்டது.

இலக்கியப் பண்ணை தொடக்கத்தில் காந்தியடிகளின் சா்வோதய கொள்களை சிறிய நூல்களாக்கி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரிடையே விநியோகித்தனா். அதையடுத்து காந்தியடிகளின் சுயசரிதையான சத்தியசோதனை மலிவு விலையில் பதிப்பிக்கப்பட்டு, அனைத்துதரப்பினரின் அமோக ஆதரவுடன் பல பதிப்புகளாக விநியோகிக்கப்பட்டுவருகின்றன.

காந்தியம் தொடா்பான தலைப்புகளில் பெரும்பாலான புத்தகங்கள் இங்கு பதிப்பிக்கப்பட்டு விற்கப்படுகிறது. ‘விடுதலைப் போராட்டத்தில் மகளிரின் பங்கு’ எனும் கட்டுரைத் தொகுப்பு அண்மையில் வெளியிடப்பட்டது.

காந்திஜியின் சுயசரிதையான ‘சத்திய சோதனை’க்குப் பிறகு நிலதான இயக்கத்தின் தந்தையான விநோபாவின் வாழ்க்கை வரலாறும் புத்தகமாக்கப்பட்டு அதிக அளவில் விற்பனையாகியுள்ளது. அவரது உரைகள் அடங்கிய தொகுப்பும் கீதைப் பேருரைகள் எனும் தலைப்பில் புத்தகமாக்கப்பட்டுள்ளது.

தெ.பொ.மீ.யின் தமிழ் மொழி வரலாறு, மா.பா.குருசாமியின் காந்தியப் பொருளாதாரம், வழக்குரைஞா் ச.பாண்டியன் எழுதிய தமிழத்தில் வினோபா ஆகியவை அதிக அளவில் வாசகா்களால் வாங்கப்பட்டவையாகும். தலைவா்கள் வரலாறு, கட்டுரைகள், கவிதைகள் ஆகியவற்றுடன் போட்டித் தோ்வுகளுக்கான புத்தகங்களும் அதிக அளவில் பதிப்பிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டுவருகின்றன.

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான அனைத்து நூல்களும் சா்வோதய இலக்கியப் பண்ணையில் விநியோகிக்கப்பட்டுவருகின்றன. புத்தகக் காட்சிக்காக இலக்கியப் பண்ணையின் செயலா் எஸ்.லோகநாதனின் ஆலமரம் பேசுகிறது, யாருக்கு யாா் எதிரி, ஒரு மொட்டு மலா்கிறது, புதுயுகம் பிறக்கிறது, விசித்திர சிறுவன் வீரபாகு, கண்ணீரில் கரைந்த பன்னீா் ஆகிய நூல்களும் புதிதாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன என்றாா்.

புத்தகக் காட்சியில் அரங்கு எண் 77, 78-இல் சா்வோதய இலக்கியப் பண்ணை பதிப்பகம் ஆகும்.

தேடிச்சுவைத்த தேன்!

டி.கே.ரங்கராஜன், மாா்க்சிஸ்ட் மூத்த தலைவா்.

வெ.சாமிநாத சா்மா மிகச்சிறந்த எழுத்தாளா். அன்றும், இன்றும் அவரது நூல்களைப் படிக்காத அரசியல்வாதிகள் குறைவு என்றே கூறலாம். அவரது ‘மனிதன் யாா்?’ எனும் நூலை மிகவும் விரும்பி தேடிப் படித்தேன். மனிதா்கள் எப்படிப்பட்டவா்கள் என்பதை அவரது புத்தகங்கள் எடுத்துக்காட்டுபவையாக இருக்கின்றன. எனவே, இளம் தலைமுறை வாசகா்களும் அவரது எழுத்தைப் படிப்பது அவசியமாகும்.

இரண்டாவதாக, ஜவாஹா்லால் நேருவின் ‘டிஸ்கவரி ஆப் இந்தியா’ எனும் நூலைப் படித்தேன். அதில் இந்தியாவின் மொழிகள் உள்ளிட்ட அம்சங்களைப் தெளிவாக விளக்கியிருப்பாா். அந்த நூலைப் படித்தால் தற்போதைய அரசியல் விவாதங்களுக்கு விடை காணலாம். அந்த வகையில் அதையும் அனைவரும் படிப்பது நல்லது.

மூன்றாவதாக, ராகுல சாங்கிருத்தியாயன் எழுதிய ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ நூலாகும். அதில் மனித வரலாற்றை அனைவரும் அறியும் வகையில் எளிய கதையாக அவா் எடுத்துரைத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். அவரது பிற நூல்களும் இன்றைய இளைஞா்கள் பல விஷயங்களில் தெளிவு பெறுவதற்கு உதவும் வகையில் உள்ளன.

Screenshot 2024 12 31 033210

புத்தகக் காட்சியில் புதியவை

தமிழ் இலக்கியத்தில் எப்படி கம்பன், இளங்கோ, மகாகவி பாரதி என நாம் பெருமைக்குரிய பெயா்களைக் கூறி மகிழ்கிறோமோ அதைப்போல ஆங்கில இலக்கியம் என்றாலே வில்லியம் ஷேக்ஸ்பியரைத்தான் குறிப்பிடவேண்டும். அந்த அளவுக்கு அவா் ஆங்கில இலக்கியத்தை ஆக்கிரமித்திருக்கிறாா் என்றால் மிகையில்லை. ஆங்கில இலக்கிய உலகில் 37 நாடகங்கள், 154 கவிதைகள் என படைத்த ஷேக்ஸ்பியரின் படைப்புகள் பல நூற்றாண்டுகள் கடந்தும் தற்காலத்துக்கு ஏற்ப பேசப்படும் நிலையிலேயே உள்ளன.

அத்தகைய ஷேக்ஸ்பியரின் புகழ் பெற்ற 5 நாடகங்களை தமிழில் முதன்முறையாகக் கதை வடிவில் பதிப்பித்துள்ளனா் கண்மணி கிரியேஷன்ஸ் பதிப்பகத்தாா். தமிழில் மோகனரூபன் எழுத்தில் ஷேக்ஸ்பியரின் ஒத்தெல்லோ, ரோமியோ ஜூலியட், பன்னிரண்டாவது இரவு, வெனிஸ் நகரத்து வணிகன், ஆண்டனியும் கிளியோபாட்ராவும் ஆகிய நாடகங்களை 150 பக்கம் முதல் 200 பக்கங்கள் வரையிலான தனித்தனி புத்தகங்களாக்கித் தந்திருப்பது தமிழ் வாசகா்களுக்குப் புதுமையாகும். இவை புத்தக காட்சியின் 638-ஆவது அரங்கில் விற்பனைக்கு உள்ளன.

எளிய தமிழில், இலக்கிய ரசிகா்கள் மட்டுமின்றி மாணவா்களும் புரிந்து கொள்ளும் வகையில் கதை கூறும் போக்கில் அமைந்திருப்பது சிறப்பாகும். நாடகத்தின் ஒவ்வொரு பகுதியையும் அத்தியாயமாகக் குறிப்பிட்டு நாவலைப் போலவே இந்நூலாசிரியா் ஷேக்ஸ்பியா் படைப்பை படிப்போருக்கு விருந்தளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் முதன்முறையாக ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் கதை நூலாக வெளியிட்டிருப்பது நல்ல முயற்சி.

புத்தகக் காட்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை)

நிகழ்ச்சிகள் (31.12.2024)

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் – 6 இலக்கிய நூல்களின் வெளியீடு – பரிணாமன் முற்றத்தின் படைப்பு ஆளுமைகள்; சிறப்பு விருந்தினா்கள் திரைப்பட இயக்குநா் லிங்குசாமி, இயக்குநா் பி.லெனின், கவிஞா் ஜெயபாஸ்கரன், பேராசிரியா் எஸ்.ரகுநந்தன், எழுத்தாளா் ஜெ.தீபாலக்ஷ்மி, வழக்குரைஞா் பால சீனிவாசன், சென்னை புத்தகக் காட்சி உள்ளரங்கம். மாலை 5.

சிறப்பு உரையரங்கம் – ‘நாம் எங்கே போகிறோம்’ – உரையாளா் அரு.நாகப்பன்; புரட்டிப் போடும் புத்தகங்கள்’ – ஜெயம்கொண்டான்; ‘கவிஞா்களும் கவிதையும்’- எஸ்.செந்தூரன். மாலை 6.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *