சென்னையில் 49-வது புத்தகக் காட்சியை, Ymca மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று வார இறுதி நாள் என்பதால், இளைஞர்களின் கூட்டமும் அலைமோதியது. சரி, இந்த புத்தகத் திருவிழாவில் இளைஞர்களின் சாய்ஸ் என்னவாக இருக்கும் என, அவர்களிடம் பேசினோம்…
சென்னை பல்கலைக்கழக மாணவரும், “போறப்போக்கில ஒரு (க)விதை”என்ற கவிதை நூலின் ஆசிரியருமான மு. வஷீர் அகமது புத்தகக் காட்சியில் நம்மிடம் பேசுகையில், “எனது வாசிப்பு பழக்கம் பள்ளி காலத்தில் செய்தித்தாள்கள் படிப்பது மூலம் தொடங்கியது. எட்டாம் வகுப்பு படிக்கும் போது நான் கவிதை எழுதத் தொடங்கினேன்.

பிறகு என் நண்பன் வாங்கித் தந்த `பாரதியார் கவிதைகள்” என்னுள் தாக்கத்தை ஏற்படுத்தியது. கல்லூரியில் இளங்கலை தமிழ் எடுத்து கவிதை வெளியில் பயணிக்கத் தொடங்கினேன். 2024 ஆம் ஆண்டு எனது கவிதை தொகுப்பினை ஒன்று சேர்த்து “போறப்போக்குல ஒரு கவிதை” என்ற தலைப்பில் ஈரோடு புத்தகக் காட்சியில் நூலாக வெளியிட்டேன்.
பாரதிதாசன், பாரதியார், நா.முத்துக்குமார், மனுஷ்யபுத்திரன் ஆகியோர் எனக்கு மிகவும் பிடித்த கவிஞர்கள். கவிக்கோ அப்துல் ரகுமானின் ஆலாபனை , நா. முத்துக்குமார் பட்டாம்பூச்சி விற்பவன், அரசி மார்லின் எழுதிய திருத்தப்படாத கவிதைகள் மற்றும் திருநங்கை பதிப்பகத்தில் இருந்து கிரேஸ் பானுவின் சிந்தனைகள் எனும் புத்தகத்தையும் இந்த ஆண்டு புத்தகக் காட்சியில் வாங்கி இருக்கிறேன்.” என்கிறார்.
சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் சங்கவி என்ற இளம் பெண் நம்மிடம் பேசுகையில், “நான் பள்ளிப் பருவத்தில் இருந்தே வரலாற்றுப் பாடத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டவள். ஆகவே வரலாறு சார்ந்த புத்தகங்களை தேடி தேடி படிக்க ஆரம்பித்தேன்.
கல்லூரி தொடக்கக் கட்டத்தில் வேள்பாரி, பொன்னியின் செல்வன் போன்ற புத்தகங்களை படிக்கத் தொடங்கினேன். தற்போது அரசியல் சார்ந்து புத்தகங்கள் குறிப்பாக பெரியார், அம்பேத்கர் ஆகியோரது புத்தகங்களை வாசிக்க தொடங்கி உள்ளேன்.
இந்த ஆண்டு புத்தகக் காட்சியில் நான் வாங்கிய புத்தகங்கள், மாரி செல்வராஜின் “காட்டுப் பேச்சிகளைக் காதலித்தவன்”, கவிஞர் இசை எழுதிய “ஆட்டுதி அமுதே ” என்ற புத்தகம் வாங்கி இருக்கிறேன். வாசிப்பு எனக்குள் பெரிய மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. எனது சிந்தனையையும் செதுக்கிக் கொண்டு இருக்கிறது.” என்கிறார் சங்கவி.