சென்னை மாதவரத்தில் 150 ஏக்கரில் தொழில்நுட்ப நகரம்: மாஸ்டர் பிளானுக்கு ஒப்பந்தம் கோரியது டிட்கோ | TIDCO seeks contract to prepare master plan for 150-acre tech city in Madhavaram

1291681.jpg
Spread the love

சென்னை: சென்னை மாதவரத்தில் 150 ஏக்கரில் உலகத் தரம் வாய்ந்த கட்டமைப்புடன் அலுவலகம், குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய தொழில்நுட்ப நகரம் அமைப்பதற்கான மாஸ்டர் பிளான் தயாரிக்க டிட்கோ நிறுவனம் ஒப்பந்தம் கோரியுள்ளது.

சென்னையில் கடந்த ஆண்டு மார்ச் 23-ம் தேதி, தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில் நடைபெற்ற ‘தொழில்நுட்பம், தொழில் முனைவோர் மற்றும் திறன் பயிற்சி மாநாட்டை (யுமாஜின்) காணொலி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது அவர், “தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் தொழில்நுட்ப பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளதன் தொடர்ச்சியாக, சென்னை, கோயம்புத்தூர், ஓசூர் பகுதிகளில் டெக் சிட்டி என அழைக்கப்படும், தமிழ்நாடு தொழில்நுட்ப நகரங்களை தமிழக அரசு தொடங்கும். இந்த நகரங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், நிதி நிறுவனங்களையும், தொழில்முனைவோரையும் ஒன்றிணைக்கும் மையங்களாக விளங்கும்” என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பையடுத்து, சென்னை மாதவரம் தாலுகாவில் 150 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, தற்போது தமிழ்நாடு தொழில் நுட்ப நகரத்தை உருவாக்குவதற்கான மாஸ்டர் பிளான் தயாரிப்பதற்கு ஒப்பந்தத்தை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) கோரியுள்ளது. இந்த தொழில்நுட்ப நகரத்தை பொறுத்தவரை, உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் உருவாக்கப்படுகிறது. குறிப்பாக, தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் துறை, பின்டெக், டீப்டெக் மற்றும் புத்தாக்க நிறுவனங்களுக்காக உருவாக்கப்படுகிறது.

இந்த நகரமானது அலுவலகத்துக்கான அமைவிடங்களும், குடியிருப்புகளும் இணைந்த வகையில் அமைக்கப்படுகிறது. இந்த வளாகத்தில் பல்வேறு திறன்மிகு, புத்தாக்க மையங்கள் உலகத்தரத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்த நகரத்தில், தரவு மைய பூங்கா மற்றும் உலகத்தரத்திலான புத்தாக்க மையம் ஆகியவை அமைகிறது. இதன் மூலம் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை பெருக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்: இந்த தொழில்நுட்ப நகர வளாகத்தில், அலுவலகம், குடியிருப்பு, வர்த்தக மையங்கள் நடந்து செல்லும் தூரத்தில் அமைக்கப்பட உள்ளது. இதில் உள்ள தரவு மையப்பூங்கா, அதிநவீன கணினி, போதிய சேமிப்பு தளம், பல நிலைகள் கொண்ட பாதுகாப்பு வசதி, பேரிடர் மீட்பு வசதி, குறைந்த மின் பயன்பாடு, அதிவேக இணைய வசதி ஆகியவற்றுடன் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு நவீன தொழில்நுட்பங்களுக்கான வசதிகளை உள்ளடக்கியதாக இருக்கும்.முதல் தர அலுவலக வளாகம் அனைத்து கட்டமைப்புகளை உள்ளடக்கியதாக இந்த நகரத்தில் உருவாக்கப்படுகிறது.

குடியிருப்புகள், பள்ளிகள், மருத்துவமனைகள், சுற்றுச்சூழல் பூங்காக்கள், விளையாட்டு வளாகம், பொழுதுபோக்கு பகுதிகள் ஆகியவை இந்த நகரத்தில் அமையும். மேலும், ஒருங்கிணைந்த சாலை மற்றும் மெட்ரோ போக்குவரத்து வசதி, தடையில்லா மின்சாரம், தண்ணீர், குழாய் மூலம் சமையல் எரிவாயு சப்ளை வசதிகள் உள்ளிட்டவை அமைந்திருக்கும். இதுதவிர, ஷாப்பி்ங் மால்கள், சில்லறை விற்பனைக் கடைகள், ஓட்டல்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவையும் இதில் அடங்கியிருக்கும் என ஒப்பந்தப்புள்ளியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *