சென்னை: சென்னை மாநகராட்சியின், சமுதாய மற்றும் பொது கழிப்பறைகளை பொது, தனியார் கூட்டாண்மை பங்களிப்பு மூலம் ரூ.1202 கோடியில் மேம்படுத்தும் பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: “சென்னை மாநகரின் சுகாதாரத்தை மேம்படுத்த, சென்னை மாநகராட்சி தனியார் துறையுடன் (சலுகைதாரர்) இணைந்து தரமான உட்கட்டமைப்புகளைக் கொண்ட சமுதாய மற்றும் பொது கழிப்பறை வசதிகளை உருவாக்கி மற்றும் பராமரித்து வருகிறது. இத்திட்டமானது, வடிவமைத்தல், கட்டுதல், நிதி மேலாண்மை, செயலாக்குதல் மற்றும் திருப்பி ஒப்படைத்தல் முறையில் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டமானது, பொது கழிப்பறைகளை புதியதாக கட்டுதல் மற்றும் புதுப்பித்தல் வேலைகளை ஓராண்டில் செயலாக்கவும் பின்னர் அவற்றை 8 வருடங்கள் பராமரிப்பு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டு, ஹைபிரிட் ஆன்யூட்டி மாடல் முறையில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் முதற்கட்டமாக, சென்னை மாநகராட்சியின் 5, 6 மற்றும் 9 வது (மெரினா மட்டும்) மண்டலங்களை உள்ளடக்கிய 372 இடங்களில் அமைந்துள்ள சமுதாய மற்றும் பொதுக் கழிப்பறைகளில் உள்ள 3,270 இருக்கைகளை ரூ.430.11 கோடி திட்ட மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிக்காக சலுகைதாரர் தேர்ந்தெடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது 70 சதவீதம் பணிகள் முடிவடைந்து, பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்பணிகளின் வெற்றியைத் தொடர்ந்து, சென்னை மாநகரம் முழுவதும் இத்திட்டத்தை அதே அளவில் செம்மையாக செயல்படுத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, 7,166 இருக்கைகளுடன் கூடிய 1002 கழிப்பறைகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, 1, 2, 3 மற்றும் 4வது மண்டலங்களில் உள்ள 285 இடங்களில் 2,301 சமுதாய மற்றும் பொதுக்கழிப்பறை இருக்கைகள் ரூ.362.60 கோடி , 7, 8, 9 மற்றும் 10வது மண்டலங்களில் 395 இடங்களில் உள்ள 2,760 சமுதாய மற்றும் பொதுக்கழிப்பறை இருக்கைகள் ரூ.455.43 கோடியிலும், 11, 12, 13, 14 மற்றும் 15வது மண்டலங்களில் 322 இடங்களில் உள்ள 2,105 சமுதாய மற்றும் பொதுக்கழிப்பறை இருக்கைகள் ரூ.383.97 கோடியிலும் மேம்படுத்தப்பட உள்ளது.
கழிப்பறைகளை பராமரிக்கும் பணிக்கான செலவினங்கள், சலுகைதாரருக்கு முக்கிய செயல்பாட்டு அளவீடுகளின் அடிப்படையில் வழங்கப்படும். இது இன்டிபென்டன்ட் இஞ்ஜினியர் என்ற கலந்தாலோசகர் மூலம் கண்காணிக்கப்படும். முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை மாநகராட்சி மூலம் மொத்தம் ரூ.1202 கோடி மதிப்பில் இப்பணிகளை மேற்கொள்ள நிர்வாக அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்” என அதில் கூறப்பட்டுள்ளது.