சென்னை மாநகராட்சி பட்ஜெட் முக்கிய அம்சங்கள்: மேயர் நிதி ரூ.4 கோடி, கவுன்சிலர் நிதி ரூ.60 லட்சமாக உயர்வு | Chennai Corporation Budget Highlights: Mayor’s funds increased to Rs. 4 crore

1354921.jpg
Spread the love

சென்னை: சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று (மார்ச் 19) தாக்கல் செய்யப்பட்டது. மழைநீர் வடிகால் துறைக்கு ரூ.1032 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேயர் நிதி ரூ.4 கோடியாகவும், கவுன்சிலர் நிதி ரூ.60 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இதில் மாநகராட்சி நிலைக்குழு தலைவர் (வரி விதிப்பு மற்றும் நிதி) சர்பஜெயா தாஸ், மாநகராட்சி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவரது பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்:

“சென்னை மாநகராட்சியில் வரும் நிதியாண்டில் (2025-26) வருவாய் வரவு ரூ.5145 கோடி, வருவாய் செலவினம் ரூ.5214 கோடியாக இருக்கும். மூலதன வரவு ரூ.3121 கோடியாகவும், மூலதன செலவு ரூ.3190 கோடியாகவும் இருக்கும். சொத்து வரி நடப்பு நிதியாண்டில் ரூ.1,900 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. இது வரும் நிதியாண்டில் ரூ.2,020 கோடியாக உயரும். அதேபோல் தொழில் வரி ரூ.550 கோடியிலிருந்து ரூ.600 கோடியாக உயரும்.வரும் நிதியாண்டில் மாநில அரசால் ஒதுக்கப்படும் முத்திரைத்தாள் மீதான கூடுதல் வரி ரூ.400 கோடி கிடைக்கும்.

மாநில நிதிக்குழு மானியம் ரூ.1,150 கோடியாக இருக்கும். தொழில் உரிம கட்டணம், கட்டிட உரிம கட்டணம் உள்ளிட்டவை மூலம் இதர வருவாய் ரூ.919 கோடியாக இருக்கும். வரும் நிதியாண்டில் பணியாளர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய செலவு ரூ.2,232 கோடியாகவும், நிர்வாக செலவு ரூ.297 கோடியாகவும், பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்பு பணி செலவினங்கள் ரூ.1,864 கோடியாகவும், கடனுக்கான வட்டி செலுத்துதல் ரூ.68 கோடியாகவும் இருக்கும்.

பேருந்து சாலை துறைக்கு ரூ.628 கோடி, மழைநீர் வடிகால் துறைக்கு ரூ.1032 கோடி, திடக்கழிவு மேலாண்மை துறைக்கு ரூ.352 கோடி, பாலங்கள் துறைக்கு ரூ.164 கோடி, கட்டிடங்கள் துறைக்கு ரூ.413 கோடி, தகவல் தொழில்நுட்ப துறைக்கு ரூ.9 கோடி, மின் துறைக்கு ரூ.50 கோடி, ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்துக்கு ரூ.10 கோடி, இயந்திர பொறியியல் துறைக்கு ரூ.22 கோடி, கல்வித் துறைக்கு ரூ.5 கோடி, சுகாதாரத் துறைக்கு ரூ.4 கோடி, மருத்துவ சேவை துறைக்கு ரூ.40 லட்சம், சிறப்பு திட்டங்களுக்கு ரூ.179 கோடி, பூங்கா துறைக்கு ரூ.39 கோடி, மண்டலங்களுக்கு ரூ.279 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.

பட்ஜெட்டை முன்னிட்டு வெளியிடப்பட்ட முக்கிய அறிவிப்புகள்:

  • மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் உணவு விற்பனை மண்டலங்கள் 2 இடங்களில் அமைக்கப்படும்.
  • இறந்தோரின் உறவினர்கள் வெளியூர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வரும் வரையில் உடல்கள் தற்காலிகமாக குளிரூட்டப்பட்ட அறையில் பாதுகாப்பாக வைக்கும் வசதி, மூலக்கொத்தளம் மற்றும் பெசன்ட் நகர் மயானங்களில் ஏற்படுத்தப்படும்.
  • மாநகராட்சியின் 70 பூங்காக்களில் ரூ.2 கோடியில் புத்தகம் வாசிப்பு மண்டலங்கள் அமைக்கப்படும்.
  • டிஜிட்டல் முறையில் ஸ்மார்ட் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படும்.
  • தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்த ரூ.3 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
  • ஆரம்ப சுகாதார நிலையங்களில் முதியோர்களுக்கு தனி நலப் பிரிவு ரூ.90 லட்சத்தில் அமைக்கப்படும்.
  • கவுன்சிலர் வார்டு மேம்பாட்டு நிதி ரூ.50 லட்சத்திலிருந்து, ரூ.60 லட்சமாக உயர்த்தப்படும்.
  • மேயர் மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியிலிருந்து ரூ.4 கோடியாக உயர்த்தப்படும்.
  • மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த தற்காலிக உடற்கல்வி ஆசிரியர்களை பணியமர்த்த ரூ.2.34 கோடி ஒதுக்கப்படும்.
  • மகளிருக்கு இலவசமாக திறன் மேம்பாட்டுப் பயிற்சி ரூ 7.50 கோடியில் வழங்கப்படும்.
  • பிறப்பு மற்றும் இறப்பு பதிவேடுகளை பராமரிக்க ரூ.5 கோடியில் ஆவண காப்பகம் மேம்படுத்தப்படும்.
  • அனைத்து தகன மேடைகளிலும் ஜெனரேட்டர் வசதி ரூ.15 கோடியில் ஏற்படுத்தப்படும்.
  • செல்லப் பிராணிகளுக்கு சிறப்பு அவசர சிகிச்சை மையம் ரூ.25 லட்சத்திலும், வட சென்னையில் செல்லப்பிராணிகளுக்கு மயான பூமி வசதியும் ஏற்படுத்தப்படும்.
  • முக்கிய பேருந்து வழித்தடங்களில் 200 இடங்களில் புதியதாக நிழற்குடைகள் அமைக்கப்படும்.
  • மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 300 பூங்காக்களை பொது மக்கள் அதிகம் பயன்படுத்திடும் வகையில், ரூ.43 கோடியில் பூங்காக்கள் பழுது பார்க்கப்படும்.
  • மேம்பாலங்கள் மற்றும் ரயில்வே மேம்பாலங்களின் கீழ்ப்பகுதியை உகந்த முறையில் ரூ.42 கோடியில் அழகுபடுத்தப்படும்.
  • பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகளை விரைவாகவும் எளிதாகவும் வழங்குவதற்கு வாட்ஸ்அப் அடிப்படையிலான தகவல் தொடர்புகளை உருவாக்கிட, ரூ.4.46 கோடி நிதி ஒதுக்கப்படும் என்பன உள்ளிட்ட 62 அறிவிப்புகளை வெளியிட்டார்.

கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்த 82 அறிவிப்புகளில், 39 அறிவிப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், 39 அறிவிப்புகள் செயல்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், 4 அறிவிப்புகள் நிர்வாக காரணங்களுக்காக கைவிடப்பட்டதாகவும் மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *