சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து? – இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு… வீட்டில் ரெய்டு!

Spread the love

சென்னை போலீஸ் கமிஷனரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள மத்திய குற்றப்பிரிவின் கீழ் விபச்சார தடுப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்தப் பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ராஜலட்சுமி. இவரின் வீடு சென்னை திருமங்கலம் வெல்கம் காலனி பகுதியில் உள்ளது. இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்பு துறை போலீஸாருக்கு ஆதாரங்களுடன் புகார் வந்தது. அதனடிப்படையில் இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி மீது வழக்கு பதிவுசெய்த போலீஸார், பிப்ரவரி 13-ம் தேதி காலையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் டீம் ராஜலட்சுமியின் வீட்டுக்குச் சென்றது. அங்கிருந்த ராஜலட்சுமியின் குடும்பத்தினரிடம் விவரத்தைத் தெரிவித்த போலீஸார், வீட்டில் சுமார் 4 மணி நேரம் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் வழக்குக்குத் தேவையான சில ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் எடுத்ததோடு அதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமியிடமும் விவரத்தை தெரிவித்து விட்டு சென்றனர்.

இன்ஸ்பெக்டரின் வீடு

இன்ஸ்பெக்டரின் வீடு

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் உயரதிகாரிகளிடம் கேட்டதற்கு, “இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எங்களுக்கு புகார் வந்தது. அதனடிப்படையில்தான் சோதனை நடத்தியுள்ளோம். விரைவில் அவரிடம் விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி தரப்பில் நம்மிடம் பேசிய போலீஸார், “ஆளுங்கட்சியில் செல்வாக்கு உள்ள ராஜலட்சுமி, விபச்சார தடுப்பு பிரிவில் பணியாற்றி வருகிறார். சட்டத்துக்குட்பட்டு இந்தப் பிரிவில் அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதனால் அவரைப் பழிவாங்கும் நோக்கில் தவறான தகவல்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸுக்கு தெரிவித்து இந்த ரெய்டை நடத்தயிருக்கிறார்கள். விசாரணை முடிவில் உண்மை தெரியவரும்” என்றனர்.

சென்னை மத்திய குற்றப்பிரிவு வட்டாரத்தில் விசாரித்தபோது, “விபச்சார தடுப்பு பிரிவில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள் சர்ச்சையில் சிக்குவது புதிதல்ல. ஏனெனில் இந்தப் பிரிவில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள் மீது ஏற்கெனவே வழக்குகள் பதிவு செய்யப்பட்டு துறைரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலும் ஓராண்டுதான் இந்தப் பிரிவில் இன்ஸ்பெக்டர்கள் பணியாற்றுவதுண்டு. சென்னையில் இந்தப் பிரிவில் இன்ஸ்பெக்டர்கள் ராஜலட்சுமி, மகேஷ்குமார் ஆகியோர் பணியாற்றி வருகிறார்கள். இதில் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார், விமான நிலையம் காவல் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டார். அவரின் இடத்துக்கு விமான நிலையம் காவல் நிலையத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் பாண்டி நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், அதிகாரிகள், அரசியல் செல்வாக்கு காரணமாக இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி இடமாற்றம் செய்யப்படவில்லை. இந்தச் சூழலில்தான் அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *