தாம்பரம்: 92வது இந்திய விமான படையின் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சென்னை, மெரினா கடற்கரையில் வரும் 6-ம் தேதி நடைபெற உள்ள வான்சாகச நிகழ்ச்சி குறித்து தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
இதில் தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தின் குரூப் கேப்டன் பரமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “92வது இந்திய விமான படையின் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு கோலாகலமான அளவில் சென்னை, மெரினா கடற்கரையில் வரும் 6-ம் தேதி மிகப்பெரிய வான்சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கு முன்னர் 2003-ம் ஆண்டு 21 வருடங்களுக்கு முன்பு இது போன்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மொத்தம் 72 விமானங்கள் மெரினா கடற்கரையில் 6-ம் தேதி, காலை 11 மணி முதல் மதியம் ஒரு மணி வரை வான் சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
ஆகாஷ் கங்கா என்னும் பாராசூட் குழுவினர் முதலில் சாகச நிகழ்ச்சியை தொடங்கி வைப்பார்கள். அதன் பின்னர் இந்த நிகழ்ச்சி மக்கள் முன்னிலையில் மிக கோலாகலமான அளவில் நடைபெற உள்ளது. இதற்கு சென்னை மக்கள், தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்கள் வந்து கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 4-ம் தேதி முழு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அந்த நிகழ்ச்சியையும் கண்டு காண மக்கள் வரவேற்கப்படுகின்றனர். இந்த விமானப்படை தினத்தின் முக்கிய கருப்பொருளாக சக்தி வாய்ந்த ஆற்றல் மிகுந்த தற்சார்பு நிலை மேம்பாட்டை காண்பிப்பது எங்கள் நோக்கம். இந்த ஆண்டு நிறைவிழாவில் நமது நாட்டை, ஒரு மேம்பட்ட நாடாக, ஒரு ஆற்றல் மிகுந்த நாடாக, ஒரு சத்தியம் மிகுந்த நாடாக, தற்சார்பு நிலையில் மேம்பட்டு நிற்கும் நாடாக காண்பிப்பது எங்களது நோக்கம். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு முக்கியஸ்தர்கள் பங்கேற்க உள்ளனர்.
மூன்று ராணுவ பிரிவுகளை சேர்ந்த இந்திய விமானப்படை, இந்திய ராணுவ படை, இந்திய கப்பல் படைகளை சேர்ந்த ஓய்வு பெற்ற மற்றும் பணியில் உள்ள அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். இது பெரிய நிகழ்ச்சி, தமிழ்நாட்டில் இது முதன்முறையாக இந்த அளவில் நடைபெற உள்ளது. இதற்காக லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அழைப்பு விடுத்துள்ளோம். கிட்டத்தட்ட 15 லட்சம் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தொலைக்காட்சி, சமூக வலைத்தளங்கள் மூலம் தமிழ்நாட்டில், சென்னையில் இல்லாத மக்கள் இதனை 6-ம் தேதி, காலை 11 மணி முதல் மதியம் ஒரு மணி வரை கண்டு களிக்கலாம். 8-ம் தேதி இந்திய விமான படையின் நிறுவன நாள், இந்த விழாவை இத்தகைய அளவிற்கு நடத்துவதற்கு பல்வேறு நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு, சிஐஎஸ்எப், எச்ஏஎல், இந்திய காவல்துறை அனைவருடன் கலந்து ஆலோசித்து நேரங்கள் கிடைக்கப்பெற்றது. இது மக்களுக்கு ஒரு பாடம் போல இருக்கும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் வந்து இந்த ஆற்றலை பார்த்து இதனால் ஊக்கம் பெற்று பிற்காலத்தில் எங்களுடன் எங்கள் குழுவில் சேர்வார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” இவ்வாறு கேப்டன் பரமன் தெரிவித்தார்.