சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.15 கோடி மதிப்புள்ள 20 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சிங்கப்பூரில் இருந்து மூன்று விமானங்களில் தங்கத்தை கடத்தி வந்த 8 பெண்கள் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்களில் அதிக அளவு தங்கம் கடத்தப்படுவதாக சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு (டிஆர்ஐ) ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பிரிவு அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகளுடன் இணைந்து சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
சிங்கப்பூரில் இருந்து இரவு 11 மணிக்கு ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானம், நள்ளிரவு 12 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், நேற்று அதிகாலை இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஆகியவை சென்னை விமான நிலையம் வந்தடைந்தன. 3 விமானங்களில் வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பினர்.
அப்போது 8 பெண்கள் உள்ளிட்ட 25 பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டதால், அவர்களையும், அவர்களது உடைமைகளையும் அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். ரூ.15 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகள், தங்க பசைகள், தங்க செயின்களை அவர்கள் மறைத்து வைத்திருப்பதை கண்டறிந்தனர்.
இதையடுத்து, 20 கிலோ தங்கத்தை கைப்பற்றி, 25 பேரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.
‘‘சென்னையில் உள்ள தங்க கடத்தல் நபர்கள்தான் கடத்தல் குருவிகளாக எங்களை சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்தனர். சிங்கப்பூரில் இருந்து ஒரே விமானத்தில் சென்னை திரும்பினால் சோதனையில் சிக்கிக் கொள்வோம் என்று 3 வெவ்வேறு விமானங்களில் சென்னை வந்தோம்’’ என்று விசாரணையில் அவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஒரே நாளில் சில மணி நேர இடைவெளியில் ரூ.15 கோடி மதிப்புடைய 20 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர்களை சிங்கப்பூருக்கு அனுப்பிய நபர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை விமான நிலையத்தில் உள்ள சுங்கத் துறையினர் உட்பட வேறு யாருக்காவது இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்
சாதாரண உடையில் கண்காணிப்பு: சென்னை வழியாக விமான பயணம் மேற்கொள்ளும் ‘டிரான்சிட்’ பயணிகள் மூலமாக 2 மாதங்களில் வெளிநாடுகளில் இருந்து சுமார் ரூ.167 கோடி மதிப்புள்ள 267 கிலோ தங்கம் கடத்தப்பட்டுள்ளதும், சென்னை விமான நிலையத்தின் சர்வதேச முனைய புறப்பாடு பகுதியில் நடத்தப்படும் பரிசு பொருள் கடை மூலமாக இந்த கடத்தல் நடந்துள்ளது என்றும் கடந்தஜூன் மாதம் கண்டறியப்பட்டது.
இதுதொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால், அப்போது தங்கம் சிக்கவில்லை.
இதற்கிடையே, கடந்த 2 மாதங்களாக சென்னை விமான நிலையத்தில் அதிக அளவில் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள், மின்னணு சாதனங்கள், ஆமை, குரங்கு, பாம்பு, அணில் போன்ற வெளிநாட்டு உயிரினங்களும் அதிகம் கைப்பற்றப்படுகின்றன.
வெளிநாடுகளில் இருந்து சென்னைக்குதங்கம் கடத்தப்படும் சம்பவம் அதிகரித்து வருவதால், சில மாதங்களுக்கு முன்பு சுங்கத்துறைக்கு கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். பெண்களும் கடத்தலில் ஈடுபடுவதால், பெண் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டனர். பயணிகளுக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக, விமான நிலையத்தில் சீருடை அணியாமல், சாதாரண உடையில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தங்க கடத்தலுக்கு சுங்கத் துறையை சேர்ந்த ஒருசிலர் உடந்தையாக உள்ளனர்என்று கூறப்படுவதால், சுங்க சோதனை பணியில் இருப்பவர்கள் செல்போன் பயன்படுத்த கூடாது. பணி நேரத்துக்கு இடையேசுங்க சோதனை நடக்கும் இடத்தில் இருந்து எக்காரணம் கொண்டும் வெளியே செல்ல கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.