சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சென்னை உள்பட தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான உள், வெளி நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிறை கைதிகள் சிறப்பு வார்டும் இங்குள்ளது. மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்கள் சுகாதாரத்துக்காக மரங்கள், செடி, கொடிகள் நட்டு பாதுகாத்து வரப்படுகிறது. இந்த பகுதியில் கஞ்சா வாசனை வருவதாக மருத்துவமனைக்கு புகார் சென்று இருக்கிறது.
அப்போது ஆய்வுசெய்த போது, ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தின் உள்ளே கிருமி நீக்கல் மையம் என்ற துறையின் கட்டிடத்துக்கு அருகாமையில் சுமார் 3 அடி உயரத்துக்கு கஞ்சா செடி வளர்ந்திருந்தது. இதை பார்த்து மருத்துவர்கள், நோயாளிகள் என பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த தகவல் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அந்த கஞ்சா செடியை வேருடன் பிடிங்கி சென்றுள்ளனர்.
இந்த கஞ்சா செடியை சமூக விரோதிகள் யாரேனும் வளர்த்து வந்தார்களா? இல்லை ஆஸ்பத்திரி வளாகத்தில் தானாக வளர்ந்ததா? அல்லது மருத்துவர்கள், நோயாளிகள் வளர்த்து வந்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஸ்டாலின் மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
