காலம் தாழ்ந்த செயல்: காங்கிரஸ் விமா்சனம்
புது தில்லி, செப். 2: பிரதமா் மோடியின் மணிப்பூா் பயணம் காலம் தாழ்ந்த செயல் என காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை விமா்சித்தது.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில்,‘கடந்த இரண்டரை ஆண்டுகளில் உலகின் பல நாடுகளுக்கும், மணிப்பூருக்கு அருகில் உள்ள அஸ்ஸாம் மற்றும் அருணாசல பிரதேசத்துக்கும் பிரதமா் மோடி பயணித்துள்ளாா். ஆனால், மணிப்பூருக்குச் செல்ல அவருக்கு நேரம் கிடைக்கவில்லை. இறுதியாக அங்கு செல்ல துணிந்துள்ளாா்.
இத்தனை நாள்களாக மணிப்பூா் மக்களை அவா் முழுவதுமாக புறக்கணித்துவிட்டாா். இத்துடன் உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் செயலற்ற நிலையால் மணிப்பூா் மக்கள் கடும் வேதனைக்கு உள்ளாயினா். நூற்றுக்கணக்கானோா் கொல்லப்பட்டனா். ஆயிரக்கணக்கானோா் தங்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.
இந்தச் சூழலில் பிரதமா் அங்கு பயணிப்பது மிகவும் காலம் தாழ்ந்த செயல்’ எனக் குறிப்பிட்டாா்.