செம்மண் கடத்தல் விவகாரம்: கோவை ஆட்சியருக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல் | Court instructions to Coimbatore Collector on red clay smuggling issue

1325681.jpg
Spread the love

சென்னை: மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் சட்டவிரோதமாக செம்மண் கடத்தப்படவில்லை என்பதை கோவை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்ய வேண்டுமென உயர் நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள மதுக்கரை, ஆலந்துரை, வெள்ளிமலை உள்ளிட்ட கிராமங்களில், சட்டவிரோதமாக செம்மண் திருடப்படுவது குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன் சட்டவிரோதமாக செம்மண் வெட்டி கடத்தப்படுவதை உயர் நீதிமன்றத்தில் வீடியோ கால் மூலமாக நீதிபதிகளிடம் நேரடியாக காண்பித்தார்.

அதையடுத்து நீதிபதிகள், இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியரும், கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவும் நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம். புருஷோத்தமன், ‘‘ஆணைக்கட்டி உள்ளிட்ட கோவையின் பல்வேறு கிராமங்களில் செம்மண் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதன்மூலம் யானை வழித்தடங்கள் முற்றிலுமாக அழிந்து வருகிறது” என குற்றம் சாட்டினார். அப்போது சட்டப்பணிகள் ஆணைக்குழு தரப்பில், செம்மண் திருட்டு தொடர்பாக மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள 600 ஏக்கர் பரப்பில் ஆய்வு செய்து வருவதாகவும், அதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது.

அதையேற்ற நீதிபதிகள், அறிக்கை தாக்கல் செய்ய வரும் நவ.4 வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர். மேலும் அப்பகுதிகளில் சட்டவிரோதமாக செம்மண் கடத்தப்படவில்லை என்பதை கோவை மாவட்ட ஆட்சியரும், கனிம வளத்துறை இணை இயக்குநரும் உறுதி செய்ய வேண்டும், என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *