சென்னை: உயர் கல்வியின் தரத்தை மேலும் உயர்த்துவது, திறன்மிகுந்த மாணவர்களை உருவாக்குவது தொடர்பான ஆய்வுக்கூட்டம் சென்னையில் உள்ள மாநில உயர்கல்வி மன்றத்தில் உயர்கல்வி அமைச்சர் கோவி.செழியன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் 13 அரசு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பதிவாளர்கள், தேர்வுகட்டுப்பாட்டு அலுவலர்கள் பங்கேற்றனர். இதில், பல்கலைக்கழகங்களின் கீழ் நடத்தப்படும் பாடப் பிரிவுகளின் செயல்பாடுகள் குறித்தும், மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் சிறந்த முறையில் கிடைக்கப்பெறுகிறதா என்பது குறித்தும் உயர்கல்வி நிறுவனங்களில் பாடத்திட்டங்கள் மற்றும் கேள்வித்தாள்களின் தரம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் உயர்கல்வி மாணவர்களின் கற்றல் மேம்பாடு, மாநில மற்றும் தேசிய அளவிலான தொழில்நுட்ப போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களின் பங்கேற்பு, வழங்கப்பட்டு வரும் பாடப்பிரிவுகளின் கிரெடிட் கட்டமைப்பு, பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சி சூழல் பற்றியும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, செயற்கை நுண்ணறிவு (AI), இயந்திரக் கற்றல் (மெஷின் லேர்னிங்) போன்ற புதிய பாடப்பிரிவுகள் தொடங்குவது, மாணவர்களின் மொழியாற்றலை மேம்படுத்துவது, வேலைவாய்ப்புகளை உறுதி செய்யும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்குவது போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று பல்கலைக்கழக அதிகாரிகளை அமைச்சர் கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் உயர்கல்வித் துறையின் செயலர் பொ.சங்கர், மாநில உயர்கல்வி மன்றத் துணைத்தலைவர் எம்.பி.விஜயகுமார், உறுப்பினர்- செயலர் டி.வேல் முருகன் கலந்து கொண்டனர்.