‘செல்பி எடுத்ததால்…’ – திருச்செந்தூர் கோயில் யானைக்கு திடீர் ஆக்ரோஷம் ஏன்? | why thiruchendur elephant sudden angry here explain

1340293.jpg
Spread the love

திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோயில் யானையை சுற்றிச் வந்து செல்பி எடுத்ததாலேயே யானை கோபமடைந்து, இருவரை தூக்கி வீசியது தெரியவந்துள்ளது. அந்த யானை தற்போது அதிகாரிகளின் தொடர் கண்காணிப்பில் உள்ளது. அதை புத்துணர்வு முகாமுக்கு அனுப்புவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தெய்வானை என்ற 26 வயது பெண் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலை உதவி பாகன் உதயகுமார், அவரது உறவினரான கன்னியாகுமரி மாவட்டம் பளுகலை சேர்ந்த கி.சிசுபாலன் (59) ஆகிய இருவரையும் யானை தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வனத் துறை அதிகாரிகள், கால்நடை மருத்துவக் குழுவினர் யானையை ஆய்வு செய்தனர். யானைக்கு திடீரென ஆக்ரோஷம் ஏற்பட என்ன காரணம் என்பது குறித்து, சிசிடிவி பதிவுகளைக் கொண்டு போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன.

தெய்வானை யானை நேற்று மாலையில் வழக்கமாக கட்டி வைக்கப்படும் மண்டபத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்தது. உதவி பாகன் உதயகுமார், அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோர் அங்கு வந்துள்ளனர். சிசுபாலன் யானையை சுற்றிச் சுற்றி வந்து செல்பி எடுத்துள்ளார். துதிக்கையில் முத்தமிட்டபடியும் செல்பி எடுத்துள்ளார். இதனால் மிரண்ட யானை, அவரை துதிக்கையால் தூக்கி சுவற்றில் வீசியுள்ளது. அவரைக் காப்பாற்ற ஓடி வந்த உதயகுமாரையும் யானை துதிக்கையால் தள்ளிவிட்டுள்ளது. சுவற்றில் வேகமாக மோதியதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர்.

சோகத்தில் தெய்வானை: உதயகுமாரை தாக்கிய பிறகே அவரை அடையாளம் கண்ட தெய்வானை யானை, அவரை துதிக்கையால் தடவிக் கொடுத்து, அவரை எழுப்பிவிட முயன்றுள்ளது. பின்னர், தலைமை பாகன் ராதாகிருஷ்ணன் வந்து, யானை மீது தண்ணீரை பீச்சியடித்து சாந்தப்படுத்தி, கம்பி வலை போட்ட அறைக்குள் யானைக் கட்டிப் போட்டார். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு தெய்வானை யானை சோகத்துடனேயே காணப்படுகிறது. நீண்ட நேரமாக சாப்பிட மறுத்துள்ளது. நேற்று காலையில் சிறிதளவு உணவையே உண்டது.

தெய்வானை யானை தற்போது எந்தவித ஆக்ரோஷமும் இல்லாமல், இயல்பாக உள்ளது. ஆனால், வழக்கமான உற்சாகம் இல்லாமல் சோகமாகவே காட்சியளிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். யானை கட்டி வைக்கப்பட்டுள்ள அறை அருகே பக்தர்கள் செல்லாத வகையில் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

யானையை 5 நாட்கள் தொடர் கண்காணிப்பில் வைத்திருக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மேலும், யானையை புத்துணர்வு முகாமுக்கு அனுப்புவது தொடர்பாகவும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. 5 நாட்கள் தொடர் கண்காணிப்புக்கு பிறகு, அதன் செயல்பாடுகளை பொறுத்து, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, யானை தாக்கியதில் உயிரிழந்த உதயகுமார், சிசுபாலன் ஆகியோரது உடல்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் தக்கார் இரா.அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. உதயகுமார் உடல் திருச்செந்தூரில் தகனம் செய்யப்பட்டது. சிசுபாலன் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும், கோயில் வளாகத்தில் உள்ள அனைத்து கடைகளும் இன்று அடைக்கப்பட்டிருந்தன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *