மதுரை: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம்சாட்டிய திமுக பகுதிச் செயலாளர் பொறுப்பை, கட்சித் தலைமை பறித்துள்ளது. மதுரை மாநகர திமுகவில் தொடரும் கட்சித் தலைமையின் ஒழுங்கு நடவடிக்கையால் அக்கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மதுரை திமுகவையும், ஒழுங்கு நடவடிக்கையும் பிரித்துப் பார்க்க முடியாது என்கிற அளவுக்கு மு.க.அழகிரி காலம் முதல் தற்போது வரை கட்சித் தலைமையால் நீக்கம் செய்யப்பட்டவர்கள் பட்டியல் நீள்கிறது. இவர்களில் ஒரு பகுதியினர், கட்சித் தலைமையிடம் பலமுறை மன்னிப்பு கடிதம் வழங்கியும் தற்போது வரை கட்சியில் சேர்க்கப்படவில்லை. அவர்களும் மாற்றுக் கட்சிக்கு செல்லாமல், மீண்டும் கட்சியில் சேர்க்கப்படுவோமா? என்று வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறார்கள்.
மதுரை மாவட்டத்தை பொறுத்தவரையில் மொத்தமுள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் திமுகவும், அதிமுகவும் கடந்த தேர்தலில் சரி பாதியாக வெற்றிப் பெற்றன. இந்த முறை ஒட்டுமொத்த தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளதால், கட்சியினர் மீது எந்த குற்றச்சாட்டுகள் வந்தாலும் உடனடியாக நீக்கப்படுகிறார்கள். அவர்கள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆதரவாளராகவே இருந்தாலும் கட்சித் தலைமை கறாராக நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக திமுக தலைமை கழகம், சம்மட்டிபுரம் பகுதி கழக செயலாளர் தவமணியை, அவர் வகித்து வந்த பொறுப்புகளில் விடுவித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், மாநகர காவல்துறை தவமணி மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. அவர் கைது செய்யபட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து திமுகவினர் கூறுகையில், ”சொத்து வரி முறைகேடு விவகாரத்தில் 5 மண்டலத் தலைவர்கள் பதவி பறிக்கப்பட்டது. வரி விதிப்பு குழு தலைவர் விஜயலட்சுமி, நகரமைப்பு குழு தலைவர் மூவேந்திரன் பதவிகளும் பறிக்கப்பட்டன. முன்னாள் மேயர் மிசா பாண்டியன், சொந்த கட்சி கவுன்சிலரை மிரட்டியதாக சமீபத்தில் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டு, தற்போது கட்சியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.
மாநகராட்சி மேயர் இந்திராணி கணவர் பொன் வசந்த், கட்சியில் இருந்து நீக்கப்பட்டதோடு சமீபத்தில் சொத்து வரி முறைகேட்டில் கைது செய்யப்பட்டார். தற்போது பகுதிச் செயலாளர் தவமணி, அவரது பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, கடந்த ஞாயிற்றுக் கிழமை தவமணி மீது குற்றஞ்சாட்டி செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினார். அதற்குப் பின் அடுத்த இரண்டு நாட்களில் திமுகவினர் மீதுதான் தவறு இருப்பது போல் பகுதிச் செயலாளர் மீது நடவடிக்கை எடுப்பது அதிர்ச்சியாக உள்ளது” என்று திமுகவினர் கூறியுள்ளனர்.
நடவடிக்கைக்கு என்ன காரணம்?: மதுரை பைபாஸ் ரோடு வேல்முருகன் நகர் குடியிருப்போர் நலச் சங்க ஒருங்கிணைப்பாளர் பழனிக்குமார் போலீஸில் கொடுத்த புகாரில், குடியிருப்போர் சங்க தேர்தலில் எங்களது அணியை எதிர்த்து சம்மட்டிபுரம் திமுக பகுதிச் செயலாளர் தவமணி, சிலரை தேர்தலில் போட்டியிட செய்தார்.
இது தொடர்பாக என் மீது தவமணிக்கு கோபம் இருந்தது. இந்தச் சூழலில் வேல்முருகன் நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான பாதையில் கவுன்சிலர் அலுவலகம் கட்ட, குடியிருப்பு மக்களிடம் தவமணி அனுமதி கேட்டு வந்தார். மக்கள் ஒப்புக் கொள்ளாத நிலையில் சிறுவர் பூங்கா அமைக்க பூமி பூஜை செய்ய முயன்ற போது எதிர்ப்பு கிளம்பியது. இதனால் ஆத்திரமடைந்த தவமணி, சேதுராணி ஆகியோர் என்னையும், என் மனைவியையும் தாக்கினார்” என்று புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகார் அடிப்படையிலேயே போலீஸார் வழக்குப் பதிவும், கட்சி நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.