சென்னை: பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதில் தமிழ்நாடு வட்ட அஞ்சல்துறை தொடர்ந்து 8-வது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.
சர்வதேச அஞ்சல் சங்கம் கடந்த 1874-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதைக் குறிக்கும் வகையில், ஆண்டுதோறும் அக்.7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை தேசிய அஞ்சல் வாரம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, தமிழ்நாடு வட்ட அஞ்சல் துறை சார்பில், தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கிய திட்டங்கள் குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அஞ்சல் நிலையங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்காக 1,457 கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. ஏற்றுமதி மற்றும் சர்வதேச அஞ்சல் சேவைகளுக்காக 66 அஞ்சல் நிலையங்களிலும், பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதற்காக 30 அஞ்சலகங்களிலும் கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.
பள்ளி மாணவர்களிடையே சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவதற்காக இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியுடன் இணைந்து தமிழகம் முழுவதும் 51.5 லட்சம் குழந்தைகளுக்கு சேமிப்புக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதில் தமிழ்நாடு வட்டம் தொடர்ந்து 8-வது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.