செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையில் இணைந்தது மங்கள்யான்

Spread the love

செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையில் மங்கள்யான் இணைந்தது 7.59 மணிக்கு உறுதிப்படுத்தப்பட்டது.

பட மூலாதாரம், ISRO

படக்குறிப்பு, செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையில் மங்கள்யான் இணைந்தது 7.59 மணிக்கு உறுதிப்படுத்தப்பட்டது.

செவ்வாய்க் கிரகத்திற்கு இந்தியா அனுப்பிய மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையில் இணைந்தது.

இந்திய நேரப்படி காலை 7.59 மணிக்கு இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்வை பெங்களூரில் இருக்கும் இஸ்ரோ கட்டுப்பாட்டு அறையிலிருந்து பிரதமர் நரேந்திர மோதி நேரடியாகப் பார்வையிட்டார்.

செவ்வாய்க் கிரகம் வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதையில் நுழைந்ததற்குப் பிறகு, அங்கிருந்த விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோதி தன் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

அதற்குப் பிறகு அங்கு உரை நிகழ்த்திய பிரதமர் மோதி, “வரலாறு இன்று நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இந்தியா முதல் முயற்சியிலேயே இதனை நிகழ்த்தியிருக்கிறது. இந்திய விஞ்ஞானிகள் சாதிக்க முடியாததை சாதித்துக் காட்டியிருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

மங்கள்யான் செவ்வாயின் சுற்றுப்பாதையில் நுழைந்ததையடுத்து, இனி அந்த கிரகத்தின் புகைப்படங்களை மங்கள்யான் எடுத்து அனுப்பும். அதன் சுற்றுச்சூழலையும் ஆராயும்.

செவ்வாய்க் கிரகத்தின் வளிமண்டலத்தில் மீத்தேன் இருக்கிறதா என்பதை ஆராய்வதும் இந்தத் திட்டத்தின் முக்கியப் பணிகளில் ஒன்று. உயிர்கள் வசிப்பதற்கான சூழல் செவ்வாயில் இருக்கிறதா என்பதை இதன் மூலம் கண்டுபிடிக்க முடியம்.

மங்கள்யானை செவ்வாயின் சுற்றுப் பாதையில் இணைப்பதற்காக, எஞ்சின்களை இயக்கி, வேகத்தை மட்டுப்படுத்தும் பணிகள் இந்திய நேரப்படி காலை 7.17 மணிக்குத் துவங்கின.

அப்போது லிக்விட் அபோஜி மோட்டார் எனப்படும் எஞ்சினும் 8 சிறிய எஞ்சின்களும் இயக்கப்பட்டன. 24 நிமிடங்களுக்கு இவை இயக்கப்பட்டு, மங்கள்யானின் வேகம் குறைக்கப்பட்டது.

சரியாக காலை 7.59 மணிக்கு மங்கள்யான் செவ்வாயின் சுற்றுவட்டப்பாதையில் இணைந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

மங்கள்யான் செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையில் இணைவதற்கு ஏதுவாக,அதன் வேகம் குறைக்கப்பட வேண்டும். அதற்கென திரவ எரிபொருளில் இயங்கும் எஞ்சின்கள் பொருத்தப்பட்டிருந்தன. இந்த எஞ்சின்கள் எதிர்த் திசையில் இயங்கி, மங்கள்யானின் வேகத்தைக் குறைக்கும்.

ஆனால், கடந்த டிசம்பரில் பூமியின் சுற்றுவட்டப்பாதையிலிருந்து மங்கள்யான் விலகியதிலிருந்து பிறகு இந்த எஞ்சின்கள் இயக்கப்படவில்லை.

அதனால், செப்டம்பர் 22ஆம் தேதியன்று, இந்த எஞ்சின்கள் சோதனை முயற்சியாக இயக்கிப் பார்க்கப்பட்டன. 3.98 விநாடிகளுக்கு இந்த எஞ்சின்கள் இயக்கிப் பார்க்கப்பட்டபோது அவை 99.6 சதவீதம் வெற்றிகரமாக இயங்கின.

முதல் ஆசிய நாடு

இந்த மங்கள்யான் விண்கலம் 2013ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி ஸ்ரீ ஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது.

சுமார், 450 கோடி ரூபாய் செலவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. உலகில் வேறு கிரகங்களுக்கு விண்கலங்களை அனுப்பும் முயற்சியில்,மிகக் குறைந்த செலவில் மேற்கொள்ளப்பட்ட திட்டம் இதுதான்.

இதற்கு முன்பாக, அமெரிக்கா, ரஷ்யா, யுரோப்பியன் ஸ்பேஸ் ஏஜென்சி ஆகிய நாடுகள் மட்டுமே இதைச் சாதித்திருக்கின்றன.

ஆசியக் கண்டத்திலிருந்து இதனை நிகழ்த்தியிருக்கும் முதல் நாடு இந்தியா மட்டுமே.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *