ராஜபாளையம்: ராஜபாளையம் சேத்தூர் தொடக்கப்பள்ளி வளாகத்தில் பேவர் பிளாக் கற்கள் பதிக்க கோரியும், தலைமை ஆசிரியரை சஸ்பெண்ட் செய்ததை கண்டித்தும் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம் அருகே சேத்தூர் காமராஜர் நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட 5 ஆசிரியர்களும், 116 மாணவர்களும் உள்ளனர். பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையம் தனி கட்டிடத்தில் செயல்படுகிறது. மழைக்காலத்தில் பள்ளி வளாகத்தில் மழைநீர் குளம் போல் தேங்கியதால் கடந்த ஆண்டு மண் கொண்டு நிரப்பப்பட்டது.
கடந்த வாரம் பெய்த மழையில் பள்ளி வளாகம் சேறும், சகதியுமாக மாறியதால் பள்ளி வளாகத்தில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கக் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து தலைமை ஆசிரியர் ஜெயராம் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். பள்ளி வளாகத்தில் பேவர் பிளாக் கற்கள் பதிக்க வலியுறுத்தி கடந்த 15-ம் தேதி மாணவர்கள் காலை உணவு சாப்பிடாமல் புறக்கணித்தனர்.
இதுகுறித்து பள்ளியில் வட்டார கல்வி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்நிலையில் தலைமை ஆசிரியர் ஜெயராம் சஸ்பென்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யக்கோரியும், பள்ளி வளாகத்தில் பேவர் பிளாக் கற்கள் பதிக்க வலியுறுத்தி பெற்றோர்கள் மாணவர்களை பள்ளி அனுப்பவில்லை. வட்டார கல்வி பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பெற்றோர் கூறுகையில்: பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறியதால் மாணவர்கள் சிலர் வழுக்கி விழுந்து விட்டனர். இதனால் பேவர் பிளாக் கற்கள் பதிக்க கோரி கடந்த 15-ம் தேதி மாணவர்கள் காலை உணவு சாப்பிடாமல் புறக்கணித்தனர்.
ஆனால் இதற்கு தலைமை ஆசிரியர் தான் காரணம் எனக்கூறி அவரை சஸ்பெண்ட் செய்து உள்ளனர். சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து, இதே பள்ளியில் அவருக்கு பணி வழங்க வேண்டும். அதே போல் பள்ளி வளாகத்தில் பேவர் பிளாக் கற்கள் பதிக்க வேண்டும். அதுவரை மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம், என்றார்.