சென்னை: ஆள்மாறாட்டம் செய்து ரூ. 20 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்தாக சேரன்குளம் அதிமுக முன்னாள் பஞ்சாயத்து தலைவருக்கு எதிரான வழக்கை விசாரிக்க புதிய அதிகாரி நியமிக்கப்படவுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, இதுதொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ரூ. 20 கோடி மதிப்புள்ள தங்களுக்கு சொந்தமான சொத்தை ஆள்மாறாட்டம் செய்தும், போலியாக கையெழுத்திட்டும் அபகரித்துள்ளதாக சேரன்குளம் அதிமுக முன்னாள் பஞ்சாயத்து தலைவரான அமுதா மற்றும் அவரது கணவர் உள்ளிட்டோருக்கு எதிராக மன்னார்குடி கர்த்தநாதபுரத்தைச் சேர்ந்த ஆர்.ரோஸ்லின் என்பவர் போலீஸில் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் முறையாக விசாரிக்கவில்லை என்பதால் சிபிஐ-க்கு மாற்றக்கோரி ரோஸ்லின் சார்பில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நடந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், “இந்த விவகாரத்தில் சிபிசிஐடி ஐஜி தலைமையில் புதிய விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டு, கூடுதல் விசாரணை நடத்தப்படும்,” என்றார். மனுதாரர் தரப்பில், சேரன்குளம் அதிமுக முன்னாள் பஞ்சாயத்து தலைவரான அமுதா மற்றும் அவரது கணவருக்கு ஆதரவாக போலீஸ் உயரதிகாரிகள் செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கின் புதிய விசாரணை அதிகாரி யார்? என்பது குறித்து டிஜிபியுடன் கலந்தாலோசித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் செப்.20-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.