சேலம்: சேலத்தில் அதிமுக பகுதிச் செயலாளரும், மாநகராட்சியின் முன்னாள் மண்டலக் குழு தலைவருமான சண்முகம் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், ஏழு பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலையில், கஞ்சா – லாட்டரி மாஃபியாவுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட தாதகாப்பட்டி, தாகூர் தெருவைச் சேர்ந்தவர் சண்முகம் (62). சேலம் மாநகராட்சியின் மண்டலக் குழு முன்னாள் தலைவராகவும், சேலம் கொண்டலாம்பட்டி பகுதி அதிமுக செயலாளராகவும் இருந்து வந்தார். தாதகாபட்டி அம்பாள் ரோட்டில் இருந்த கட்சி அலுவலகத்தில் இருந்த சண்முகம் புதன்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் வீடு நோக்கி புறப்பட்டார். தாதகாப்பட்டி அருகே உள்ள சஞ்சீவிராயன் பேட்டை மாரியம்மன் கோயில் தெரு பகுதியில் சென்ற சண்முகத்தை, இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த 4 பேர் வழிமறித்து வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பினர்.
அன்னதானப்பட்டி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும், சண்முகம் கொலை செய்யப்பட்டதை அறிந்த அவரது மனைவி பரமேஸ்வரி மற்றும் உறவினர்கள், அதிமுக-வினர் தாதகாப்பட்டிக்கு திரண்டு வந்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தடுக்க சேலம் மாநகர காவல் துணை ஆணையர் மதிவாணன் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கொலைக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை எடுக்க விடமாட்டோம் எனக்கூறி அதிமுக நிர்வாகிகள், சாலை மறியல் போராட்டத்தை தொடர்ந்தனர். போலீஸாரின் பேச்சுவார்த்தைக்கு பின்னர், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அங்கிருந்து அகற்றப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து சண்முகத்தின் உடலைக் கைப்பற்றிய அன்னதானப்பட்டி போலீஸார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இக்கொலை தொடர்பாக அன்னதானப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை விரைந்து பிடிக்க, சேலம் மாநகர காவல் ஆணையர் விஜயகுமாரி உத்தரவின் பேரில், மாநகர காவல் துணை ஆணையர் மதிவாணன் மேற்பார்வையில் ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீஸார் சந்தேகத்தின் அடிப்படையில் ஏழு பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திட்டமிட்டு படுகொலை: அதிமுக மாநகராட்சி மண்டல குழு முன்னாள் தலைவர் சண்முகத்தை கொலை செய்த மர்ம நபர்கள், திட்டமிட்டு கொலையை அரங்கேற்றியது போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சண்முகம் அலுவலகம் வந்து வீட்டுக்கு செல்லும் நேரத்தை கொலையாளிகள் பல நாட்களாக நோட்டமிட்டு, கொலையை நடத்துவதற்கான வீதிகளையும் பார்த்து வைத்து, சம்பவ இடத்தில் இருந்த இரண்டு தெரு விளக்குகளையும், வீதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை முன் கூட்டியே சேதப்படுத்தி உள்ளனர். சண்முகத்தின் தலையில் வெட்டியும், அவரது முகத்தை சிதைத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
கஞ்சா – லாட்டரி மாஃபியாவுக்கு கொலையில் தொடர்பா? – அதிமுக மாநகராட்சி மண்டலக்குழு முன்னாள் தலைவர் சண்முகம் , அப்பகுதியில் கஞ்சா விற்பனையாளர்கள் குறித்தும், சட்ட விரோதமான ஒரு நம்பர், மூன்று நம்பர் லாட்டரிகளை விற்பனை செய்பவர்களையும் கண்டித்து வந்தார். மேலும், இதன் மீது நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு தகவல் கொடுத்து வந்தார்.
கஞ்சா விற்பனைக்கும், லாட்டரி விற்பனைக்கும் இடையூறாக இருந்ததால், சண்முகத்தை அக்கும்பல் திட்டமிட்டு படுகொலை செய்து இருக்க வாய்ப்பு இருக்கலாம் என்பதால் அந்த கோணத்தில் போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இதன் பின்னணியில் கஞ்சா, மாஃபியா, லாட்டரி கும்பல் இயங்கியுள்ளதா என போலீஸார் விசாரித்து வரும் நிலையில், சேலத்தில் வழக்கமாக, சட்ட விரோதமாக விற்பனையாகி வந்த ஒரு நம்பர், இரண்டு, மூன்று நம்பர் லாட்டரி கடைகள் மூடப்பட்டிருந்தன.