சேலம், தீவட்டிப்பட்டியில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழாவை ஒரு தரப்பினர் மட்டுமே நடத்தி வந்தனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து தாங்களும் இந்த ஆண்டு சித்திரை திருவிழாவில் பங்கேற்று நடத்தப்போவதாகவும் சாமி கும்பிட வருவதாகவும் தெரிவித்தனர். இதனால் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.
இதைத்தொடர்ந்து வட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் இதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. பேச்சுவார்த்தையின் போது மேலும் வாக்குவாதமே இருதரப்பினருக்கும் இடையே நீடித்து வந்தது.
இந்த நிலையில் இன்று(3-ந்தேதி) மீண்டும் வட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் இதில் காரசாரமாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். பின்னர் இதுகலவரமாக மாறியது.இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டதுடன், அப்பகுதியில் இருந்த கடைகளுக்கு தீ வைத்தனர்.
இதில் பேக்கரி கடைகள், டீக்கடைகள், வணிக நிறுவனங்கள் என 10&க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமானது. இதனால் அப்பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. மேலும் ஒரு தரப்பினர் சேலம் -&பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து அனைத்து வாகனங்களும் மாற்றுப் பாதையில் திருப்பி அனுப்பப்பட்டது.மேலும் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டவர்களை போலீஸார் தடியடி நடத்தி கலைந்து போகச்செய்னர். மோதலில் ஈடுபட்ட20-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்துஉள்ளனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் தொடர்ந்து பதட்டமான நிலையே நீடித்து வருகிறது. இதைத்தொடர்ந்து சேலம், தருமபுரி மற்றும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர். கலவரம் மேலும் பரவாமல் இருக்க போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.