இந்தச் சலுகைப் பற்றி பொதுமக்கள் கூறும்போது,
“சேலம் மாவட்டம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சித்தர் கோயில் -கொல்லப்பட்டி- ஜங்ஷன் – சிவராஜ் கல்லூரி – தண்ணீர்த்தொட்டி வரையிலான வழித்தடத்தில் இயங்கி வரும் மினி பேருந்தில் இந்தச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்குப் பெரிதும் உதவிகரமான செயலாகத்தான் நாங்கள் இதைப் பார்க்கின்றோம்.
பள்ளி நேரங்களில் கூட்டமான பேருந்துகளில் அலைக்கழிக்கப்படும் நிலையில் காலை… மாலை நேரத்தில் எங்கள் பிள்ளைகள் சுமுகமான பயணம் மேற்கொள்ள இச்சலுகை உதவியாக உள்ளது. தனியார் மினி பேருந்து என்பதால் நடத்துடனர்களின் அன்பான கண்டிப்பும், மாணவர்கள் மீதான தனி கவனமும் கருடாழ்வார் மினி பேருந்தின் மீது மதிப்பைக் கூட்டுகிறது. இந்தப் பேருந்தில் தொடர்ந்து பயணிப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது ” என்கின்றனர்.

இது குறித்து விஷ்ணு டிராவல்ஸ் உரிமையாளர் விஸ்வநாதனிடம் பேசும்போது,
“இந்தச் சலுகை 1996-ல் பேருந்து இயக்க ஆரம்பித்தது முதலே உள்ளது. அன்றைக்கு பள்ளி மாணவர்களுக்குப் பயணக் கட்டணமாக இரண்டு ரூபாயும், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயணமாகவும் அறிவித்து செயல்படுத்தி வந்தோம். தற்போது விலைவாசி உயர்வுக்கு ஏற்றபடி ₹5 ஆக உயர்த்தி உள்ளோம். சுமார் 29 ஆண்டுகளாக தொடர்ந்து இந்த நடைமுறை உள்ளது.

இந்தப் பேருந்தில் குறைவான வருமானமே வரும் என்பதால், மற்ற வழித்தட மினி பேருந்து வழி அதனை சரிகட்ட முயற்சிப்போம். என்றைக்கும் இந்தச் சலுகையை நாங்கள் சுமையாக கருதியதே இல்லை. மாணவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான சேவையாகவே செய்து வருகிறோம்” எனக் கூறி மனம் நெகிழ்கிறார்.