சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டம், தாத்தியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் – வினோதா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்து, கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாகியும் பிறப்புச் சான்றிதழ் பெறமுடியாமல் போராடி வருகின்றனர். இது குறித்த தகவல் நமக்குக் கிடைக்கப்பெறவே, அவர்களை நேரில் சென்று சந்தித்து, `என்ன பிரச்னை?” என்று விசாரித்தோம்.
தங்கள் பிரச்னை குறித்து தம்பதியர் விரிவாக எடுத்துரைத்தனர். குழந்தையின் தாய் வினோதா பேசுகையில், “பிரசவத்திற்காக என்னை 19.05.2016ல் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கூட்டிட்டுப் போனாங்க. எங்களுடைய குழந்தை மறுநாள் பிறந்தது. அப்போதிலிருந்தே என் குழந்தைக்குப் பிறப்புச் சான்றிதழைப் பெற முயற்சி செய்றேன். பிறப்புச் சான்றிதழ் வாங்கித் தர்றேன்னு சொல்லி அப்போவே 500 ரூபாய் வாங்குனாங்க. குழந்தை பிறந்த உடனே சில மருத்துவக் காரணத்துக்காக அவசர சிகிச்சை பிரிவிலும் இருந்தோம். அதுக்குப் பதிவு செஞ்ச டாக்குமென்ட்ஸ் எல்லாம் எங்கிட்ட இருக்கு. டிஸ்சார்ஜ் சம்மரி இருந்தால் வாங்கிடலாம்ன்னு சொல்லியே பல நாள் அலைக்கழிக்கிறாங்க. அங்க வேலை பார்த்த நர்ஸ் ஒருத்தவங்க வாங்கித் தர்றேன்னு சொன்னாங்க. இப்போ அவங்களும் வேற இடத்துக்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டு போனதுனால, நீங்களே எப்படியாவது வாங்கிக்கோங்கன்னு அலட்சியமா சொல்றாங்க.
அரசு மருத்துவமனையிலுள்ள பிறப்பு – இறப்பு பதிவு அலுவலகத்துல போய் கேட்கும்போது, ‘உங்க பிள்ளையோட பிறப்பு பதிவு செய்யப்படல’ன்னு சொன்னாங்க. அதுக்கப்புறம் அவங்களே சேலம் மாநகராட்சி அலுவலகத்துல போய் கேட்டுப் பார்க்கச் சொன்னாங்க.
தட்டிக்கழிக்கும் அதிகாரிகள்… அலைக்கழிக்கப்படும் பெற்றோர்!
அங்க போய் கேட்டா, பிறப்பு பதிவில்லா சான்று வாங்குன பிறகுதான் பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கணும்னு அதுக்கு ஒரு நோட்டரி வழக்கறிஞர் ஆணையுறுதி ஆவணம், உள்ளூர் மக்கள் வாக்குமூலம், மருத்துவப் பதிவேடு நகல், கிராம நிர்வாக அலுவலர் பிறப்பு பதியவில்லைன்னு உறுதிமொழி மற்றும் ஆண்டுகளுக்கு ஏற்ப அபராதத் தொகைன்னு எல்லாம் தேவைப்படும்ன்னு சொன்னாங்க. ஆனா பெரிசா எழுதப் படிக்க தெரியாத நாங்க இதை எப்படி பண்ணுறதுன்னு தெரியாம ஒரு வக்கீல்கிட்ட போய் கேட்டோம். அவர் பத்தாயிரம் ரூபாய் கொடுத்தா பிறப்புச் சான்றிதழ் வாங்கித் தர்றேன்னு சொன்னாரு. சாதாரணமா உழைச்சி சாப்பிடுற மக்களால அந்தப் பத்தாயிரத்தை எப்படி கொடுக்க முடியும்? அதுல ஏழு வருசம் ஓடிருச்சு. இந்த எழு வருசத்துல ஐந்நூறு, ஆயிரம் ரூபாய்ன்னு ஏராளமா செலவழிச்சாலும் பணம் வாங்கினப் பிறகு யாருமே கண்டுக்கிறதில்லை.
கொஞ்ச நாளுக்கு முன்னாடி நடந்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் காடையாம்பட்டி வருவாய் துறையினர்கிட்ட மனு கொடுக்கும்போது, அவர் அதை வாங்கவே இல்லை. இப்போ கடைசியாக தாத்தியம்பட்டியிலுள்ள ‘முக்கலை வளர்ப்புக்குழு இளையோர் நற்பணி மன்றம்’ பத்தி தெரியவந்து, கடந்த ரெண்டு வருசமா முதல்வரோட மனு பிரிவுக்கு அந்த மன்றம்தான் பார்த்திட்டு இருக்குன்னு தெரிஞ்சுது. கடைசியா இந்த மன்றத்தின் மூலமாச்சும் எங்க பிள்ளைக்கு பிறப்புச் சான்றிதழ் கிடைக்கும்ன்னு நம்பிப் போராட்டிட்டு இருக்கேன்” என்று விரக்தி பொங்க பேசி முடித்தார் வினோதா.