சேலம்: 5 லட்சம் விரல் ரேகைகளில் டாக்டர் அம்பேத்கர் உருவம்; அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை!

Spread the love

இந்தியா ஒரு ஜனநாயக நாடு. அந்த ஜனநாயகத்தின் உயிர் நாடி வாக்குரிமை. அந்த வாக்குரிமையின் முக்கியத்துவத்தை இளம் தலைமுறையிடையே ஆழமாக விதைக்கும் நோக்கில், சேலம் அரசு பொறியியல் கல்லூரி (Government College of Engineering, Salem) மாணவர்கள் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க உலக சாதனை முயற்சியை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர்.

கல்லூரியில் செயல்பட்டு வரும் ART OF SPHERE குழுவின் மையக்கருத்து “VIBGIOR 26” மாணவர் அணியின் சார்பில், வாக்காளர் விழிப்புணர்வை மையமாகக் கொண்டு இந்த மாபெரும் முயற்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்வின் மையமாக, 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது ஒற்றுமை, ஒத்துழைப்பு மற்றும் சமூக பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில், 5 லட்சத்துக்கும் அதிகமான விரல் ரேகைகளை பயன்படுத்தி, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பிரமாண்ட கிராண்ட் போர்ட்ரேட்டை உருவாக்கினர்.

இந்த முயற்சி ஒரு கலை நிகழ்வாக மட்டுமல்லாமல், இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடான “மக்களே அதிகாரம்” என்ற கருத்தை உயிர்ப்பிக்கும் சமூக விழிப்புணர்வு இயக்கமாக அமைந்தது. வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு, குறிப்பாக முதல் முறையாக வாக்களிக்க உள்ள இளம் வாக்காளர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை உணர்ந்து, தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்குடன் இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டது.

இந்த மாபெரும் போர்ட்ரேட்(portrait )உருவாக்கத்தில் பங்கேற்ற அனைத்து மாணவர்களும் நீல நிற உடை அணிந்து கலந்து கொண்டனர். சமூக நீதி, சமத்துவம் மற்றும் அரசியலமைப்புச் சிந்தனையின் அடையாளமாக விளங்கும் டாக்டர் அம்பேத்கரின் நீல நிற அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த உடைத் தேர்வு செய்யப்பட்டது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஒரே சிந்தனையுடன், ஒரே இலக்கை நோக்கி ஒற்றுமையாகவும் ஒத்துழைப்புடனும் செயல்பட்டதே இந்த முயற்சியின் மிகப் பெரிய பலமாக அமைந்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *