சைபர் க்ரைம் வழக்கு: உதகை நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கர் | The police brought Savukku Shankar to produce him in ooty court

1287197.jpg
Spread the love

உதகை: சவுக்கு சங்கர் மீது உதகை சைபர் க்ரைம் காவல் நிலையத்திலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் விசாரணைக்கு ஆஜராவதற்காக இன்று (திங்கட்கிழமை) உதகை நீதிமன்றத்துக்கு சவுக்கு சங்கர் அழைத்து வரப்பட்டார்.

சென்னையைச் சேர்ந்த சவுக்கு சங்கர், ‘சவுக்கு மீடியா’ என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அதில் விவாத நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். இதுதவிர பல்வேறு தனியார் யூடியூப் சேனல்களில் விவாதங்களில் பங்கேற்று அரசியல் தொடர்பான கருத்துக்களை பேசியும் விமர்சித்தும் வந்தார்.

அப்படி தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த சவுக்கு சங்கர், போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பெண் போலீஸார் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர் மீது கோவையை சேர்ந்த பெண் உதவி ஆய்வாளர் ஒருவர் சைபர் க்ரைமில் புகார் அளித்தார்.

இப்புகாரின் பேரில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கடந்த மே 4-ம் தேதி தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் வைத்து அவரைக் கைது செய்தனர். கோவையைத் தொடர்ந்து சென்னை, சேலம், திருச்சி என அடுத்தடுத்து பெண் போலீஸார் சவுக்கு சங்கர் மீது புகார் அளித்தனர். இப்புகார்களின் அடிப்படையில் பேரில் மேற்கண்ட மாவட்டங்களில் சவுக்கு சங்கர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, பெண்களை அவதூறாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.

இந்நிலையில், நீலகிரி மாவட்டம் உதகை புதுமந்து காவல்நிலைய ஆய்வாளர் அல்லிராணி, சவுக்கு சங்கர் பெண் காவலர்களை அவதூறாக பேசியது தொடர்பாக உதகை சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் கடந்த மே மாதம் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் நீலகிரி மாவட்ட சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் கோவையில் பதிவான வழக்கில் சவுக்கு சங்கருக்கு அண்மையில் ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனாலும் மற்ற வழக்குகளில் அவருக்கு ஜாமீன் கிடைக்காததால் இன்னும் அவர் சிறையில் இருக்கிறார். இந்த சூழலில் உதகையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஆஜர்படுத்துவதற்காக இன்று காலை பலத்த பாதுகாப்புடன் சவுக்கு சங்கரை காவல் துறையினர் கோவையில் இருந்து வாகனம் மூலம் உதகை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர்.

காலை 11.30 மணியளவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உதகை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு சவுக்கு சங்கர் அழைத்து வரப்பட்டார். அப்போது நீதிமன்ற வளாகத்தில் ஏராளமான பத்திரிகையாளர்கள் குவிந்திருந்தனர். இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்காக அதிமுக வழக்கறிஞர்கள் தேவராஜ், பால நந்தகுமார், சிவகுமார் ஆகியோர் ஆஜராகினர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *