சென்னை: சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்தது தொடர்பாக பாஜக கவுன்சிலர் தாக்கல் செய்த தனிநபர் புகார் மனுவுக்கு பதிலளிக்கும்படி, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் ஏப்ரல் மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ, வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
இது சம்பந்தமாக சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்த், சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனிநபர் புகார் மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், வெறுப்புப் பேச்சு பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான இந்த புகாரை விசாரித்து, மதரீதியாக வெறுப்புணர்வை ஏற்படுத்துதல், மத உணர்வுகளை புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவரை தண்டிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இந்த புகார் மனு, எம்.பி – எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த புகார் மனு குறித்து அக்டோபர் 30-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.